இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், இளைய சுப்பர் ஸ்டார் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ இந்திய மதிப்பில் 100 கோடி ரூபா வசூலித்து பெரும் சாதனையை செய்திருக்கிறது.

வேலையில்லா பட்டதாரி=2, வடசென்னை, மாரி=2 ஆகிய படங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில்வெளியான ‘அசுரன்’ மிகப்பெரும் வசூல் வெற்றியை பெற்றிருக்கிறது. நடிகர் தனுஷ் நடித்து, இயக்கி வெளியான ப. பாண்டி படத்திற்குப் பிறகு அவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் அசுரன் படம் இத்தகைய அசுர சாதனையை செய்திருக்கிறது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு இவ்வாறு தெரிவித்துள்ளார்,

“இளையசுப்பர் ஸ்டார் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் வெளியான பத்து நாட்களுக்குள் இந்திய மதிப்பில் நூறுகோடியை வசூலித்து பெரும் சாதனையை எட்டியிருக்கிறது. தமிழக படமாளிகைகள் மூலம் 50கோடி ரூபாவும், வெளிநாடு, டிஜிற்றல் உரிமை, தொலைகாட்சி உரிமை என 50 கோடிக்கும் என நூறுகோடி ரூபாவுக்குமேல் வசூலித்திருக்கிறது.

இன்றும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் நன்றாக இருக்கிறது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் முன்னணி நடிகர்களான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித், கல்விச் செம்மல் சூர்யா, ஆகியோரின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக தனுசும் இணைந்திருக்கிறார். ” என்றார். தனுஷின் இந்த வெற்றியை அவரது ரசிகர்களும், தமிழ் திரையுலகமும்  உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. 

இதனிடையே அசுரன் படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன்  தற்பொழுது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்கித் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதும், நடிகர் சூர்யாவிடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.