இந்தியாவில், புழல் புத்தகரத்தை சேர்ந்த சுரேஷ் - அனுசியா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் இருந்துள்ளார்.

இந்நிலையில், இறைச்சிக் கடையை நடத்தி வந்த சுரேஷ், கடந்த ஞாயிறன்று வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி அனுசியா தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இறப்புக்கான காரணம் குறித்து மனைவி, உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உடலில் கலந்து இருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி அனுசியாவிடம் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த அனுசியா, பிறகு கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததோடு, தன்னை அடித்தும் துன்புறுத்தியதால் உறவினர் முரசொலி மாறன் என்பவரின் உதவியுடன் கணவருக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக அனுசியா கூறியுள்ளார்.

ஆழந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனுசியாவை கைது செய்த பொலிஸார், கொலைக்கு உதவியாக இருந்த முரசொலி மாறனையும் தேடி கைது செய்துள்ளனர்.