உடல் எடை அதிகரிப்பானது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாகும். எடை அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித டயட் முறைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. 

எனினும் உடல் எடையை சீராக பராமரித்தல் பலருக்கும் சவாலான விடயமாகவே உள்ளது. இந்நிலையில் உடல்எடையை குறைப்பதற்கும், குறைத்துக் கொண்ட உடல்எடையை பராமரிப்பதற்கும் “கலோரி டயட்”  என்ற உணவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கலோரி என்பது ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் தேவைப்படும் சக்தியின் அளவீடு ஆகும். ஒருவருக்கு அவரின் பணியின் தன்மையைப் பொறுத்து கலோரிகளின் அளவுநிர்ணயிக்கப்படுகிறது. இவ்விடயத்தில் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய  “டயட்” ஒன்றினை பின்பற்றுதல் முக்கியமானதாகும்.

“கலோரி டயட்”  முறை மூலம் ஒரு நாளைக்கு 900 கலோரி சக்தி கொண்ட உணவினை உட்கொண்டு தற்போதிருக்கும் உடல் எடையை பத்து தினங்களுக்குள் குறைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

இவ் கலோரி உணவுக்கட்டுப்பாட்டு பட்டியல் படி 

காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான சுடுநீர் அல்லது ஒரு கோப்பை கிரீன் டீ, பருகுதல் வேண்டும். காலை 9 மணிக்குள் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

காலை உணவாக மரக்கறிக் கலவை அல்லது பழக்கலவை  எடுத்துக் கொள்ளவேண்டும். இக்கலவையுடன்  இரண்டு தே.கரண்டி தயிர், 1/4 தே.கரண்டி மிளகுத்தூள், 1/4 தே.கரண்டி சீரகத்தூள், தேவையான அளவு உப்பு இதனை நன்றாக கலந்து காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

காலை உணவில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் தவிர்த்தல் வேண்டும்.

11 மணி அளவில் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம். அத்துடன் சிவப்பு சீனியுடன் கோப்பியோ அல்லது தேநீரோ அருந்தலாம். 

மதிய உணவாக சோறு எடுத்துக் கொள்ளாமல், 2 சப்பாத்தியுடன் இரண்டு துண்டு வேகவைத்த கோழி இறைச்சியை உட்கொள்ளலாம். முட்டை உண்பதென்றால் அவித்த முட்டையை ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். ஆட்டிறைச்சியைத் தவிர்த்துவிடவேண்டும். 

நான்கு மணிக்கு கிரீன் டீ  அல்லது வெள்ளை சீனி கலக்காத பானத்தை அருந்தலாம். மாலை 6.30  மணிக்கு முன் கொண்டகடலை, பச்சைப்பயிறு, காராமணி போன்றவற்றை உட்கொள்ளலாம்.

இரவு நேரத்தில் பசியேற்பட்டால்  8 மணி முதல் 9 மணிவரை  பழங்களை மட்டும் உண்ண வேண்டும். இடை நடுவே தண்ணீர் அருந்தலாம். தொடர்ந்து பத்து நாட்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றினால் உங்களின் எடை ஐந்து கிலோ முதல் எட்டு கிலோ வரை குறையும். 

குறைத்துக் கொண்ட உடல் எடையை பராமரிக்கவேண்டும் என்றால் நாளாந்தம் முப்பது நிமிட நடைபயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகியவற்றை பின்பற்றவேண்டும்.