ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  பொது­வான நிலைப்­பாட்டை  முன்­வைத்து தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தற்கு ஐந்து தமிழ் தேசி­யக்­கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. இதற்­கான  ஆவ­ணத்­திலும் இந்த ஐந்து கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள்  கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அனைத்து கட்­சி­களும்  பொது­நி­லைப்­பாட்­டுக்கு வர­வேண்­டி­யதன் அவ­சியம்  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.  யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மாணவர் ஒன்­றி­யத்தின் முயற்­சியையடுத்து ஐந்து சுற்­றுப்­பேச்­சுக்­களின் பின்னர் இந்த இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இந்­தப்­பேச்­சு­வார்த்­தையில்  கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி கலந்து கொண்­டி­ருந்­த­போ­திலும்  அர­சியல் யாப்­பு­ச­பையின்  இடைக்­கால அறிக்­கை­யினை நிரா­க­ரிக்­க­வேண்டும் என்ற விட­யத்தில் அவர்கள் முரண்­பட்டு நின்­ற­மை­யினால் இந்த பொது இணக்­கப்­பாட்டில் அவர்கள்  கைச்­சாத்­தி­ட­வில்லை.  ஏனைய  கட்­சி­க­ளான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி,  தமிழ் மக்கள் கூட்­டணி,  புௌாட்,  ரெலோ,  ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய ஐந்து கட்­சி­களின் தலை­வர்கள்  பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­துடன் இதன் அடிப்­ப­டையில்  ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான மூன்று வேட்­பா­ளர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வது என்றும் அதற்கு ஏற்­ற­வ­கையில் பொது­வான தீர்­மானம் ஒன்­றினை எடுப்­பது என்றும் முடிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பையடுத்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றினை எடுத்து ஜனா­தி­பதித் தேர்­தலில்  ஒன்­றி­ணைந்த தீர்­மா­னத்தை  எடுப்­ப­தற்கு இதற்கு முன்­னரும்  முன்­மு­யற்­சிகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.  தமிழ் தேசிய பணிக்­கு­ழுவின் தலை­வரும்  முன்னாள் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி கும­ர­கு­ரு­ப­ரனும் இந்த நட­வ­டிக்­கையில் முதலில் ஈடு­பட்­டி­ருந்தார். இவர் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உட்­பட பல­ரையும் சந்­தித்து பேசி­யி­ருந்தார்.  பொது இணக்­கப்­பாடு காணும் முயற்­சிக்கு தலை­வர்கள் இணங்­கி­யி­ருந்­த­போ­திலும்  அந்த முயற்சி வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இதன் பின்னர் இதே­போன்­ற­தொரு முயற்­சியை தமிழ் மக்கள் பேர­வையால்  நிய­மிக்­கப்­பட்ட கல்­வி­மான்கள்,  மத­கு­ரு­மார்கள்,  ஊடக பத்தி எழுத்­தா­ளர்கள்  போன்ற  கற்­றறி­ந்த சமய சமூக பிர­மு­கர்கள் சுயா­தீ­னக்­ கு­ழு­வாக மேற்­கொண்­டி­ருந்­தனர்.  இவர்­களும்  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர்  சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்  உட்­பட பல­ரையும் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது  ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் சார்பில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை நிய­மிக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.  தமிழ் கட்­சி­களின் தலை­வர்­களை ஓர­ணியில் திரட்டி அவர்­களை கலந்­து­ரை­யா­ட­விட்டு  தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­வ­தற்கு பதி­லாக இந்த சுயா­தீ­னக்­கு­ழுவே  பொது­வேட்­பாளர் ஒரு­வரை நிய­மிக்­க­வேண்டும் என்ற யோச­னையை  முன்­வைத்து அதற்­கான அழுத்­தங்­களை கொடுக்கும் வகை­யி­லேயே செயற்­பட்­டி­ருந்­தது. இதனால்  இந்த சுயா­தீ­னக்­கு­ழுவின் முயற்­சியும் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலை­யில்தான் யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மாணவர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில்  ஆறு தமிழ் தேசி­யக்­கட்­சி­களை  ஒன்­றி­ணைத்து ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது தமிழ் மக்­களின் பிரச்­சினை தொடர்பில் பொது­வான  நிலைப்­பாட்­டுக்கு வந்து அத­ன­டிப்­ப­டையில் தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தற்­கான முயற்சி  மேற்­கொள்­ளப்­பட்­டது.

மாணவர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில்  ஐந்து சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தைகள்  இடம்­பெற்ற நிலையில் பொது­வான நிலைப்­பாட்­டுக்கு வரு­வ­தற்கு  ஆறு கட்­சி­களின் தலை­மை­களும்  உடன்­பட்­டி­ருந்­தன.  நேற்று முன்­தினம் இறுதிச் சுற்­றுப்­பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­ற­நி­லையில் ஒற்­றை­யாட்­சி­யினை ஏற்கும் வகையில் அர­சியல் யாப்பு சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள  புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை  நிரா­க­ரிக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி  முன்­வைத்­துள்­ளது.  ஆனால் ஏனைய கட்­சிகள் இந்த கோரிக்­கைக்கு  இணக்கம் தெரி­விக்­க­வில்லை. ஏனெனில் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள பொது  ஆவ­ணத்தில் ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்று திட்­ட­வட்­ட­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால்  இடைக்­கால அறிக்­கை­யினை நிரா­க­ரிக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அந்தக் கட்­சிகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

இதன் கார­ண­மா­கவே தமிழ் தேசிய மக்கள் முன்­னணி பொது ஆவ­ணத்தில் கைச்­சாத்­தி­டாது வெளி­யே­றி­யுள்­ளது. ஆனால் ஏனைய அனைத்து விட­யங்­க­ளிலும் அந்­தக்­கட்­சியும் பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருந்­தது. ஜனா­தி­ப­தி­த் தேர்தல் தொடர்பில் ஏற்­க­னவே தமிழ் தேசிய மக்கள் முன்­னணி பகிஷ்­க­ரிப்­புக்­கான முடிவை எடுத்­தி­ருந்­தது. ஆனாலும் பொது இணக்­கப்­பாட்டின் அவ­சியம் கருதி அவர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்கள்  நடை­பெற்­றன. இருந்­த­போ­திலும் அந்த முயற்சி பய­ன­ளிக்­க­வில்லை.

தற்­போ­தைய நிலையில் ஐந்து தமிழ் தேசி­யக்­கட்­சிகள் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை  முன்­வைக்­கும்­ வி­ட­யத்தில் பொது நிலைப்­பா­டொன்­றுக்கு வந்­தமை வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்­கை­யாகும். யாழ். மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக  மாணவர் ஒன்­றி­யத்தின் இந்த முயற்சி வர­லாற்று சாதனை என்­ப­துடன் வர­வேற்­கத்­தக்க  செயற்­பா­டாகும்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, ரெலோ,  புௌாட்  ஆகி­ய­னவும்  கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்த சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் கூட்­ட­மைப்பின் சார்பில் வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்ட விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் பொது நிலைப்­பாட்­டுக்கு  தற்­போ­து­வந்­தி­ருப்­பது வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு திருப்­பு­மு­னை­யா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும்  பிர­தான மூன்று வேட்­பா­ளர்­க­ளையும்  ஒன்­றி­ணைந்து சந்­தித்து தமிழ் மக்­களின் பொது­வான நிலைப்­பாட்­டினை  எடுத்­து­ரைப்­ப­தற்கு ஐந்து தமிழ் கட்­சி­களின் தலை­வர்­களும் ஓர­ணியில் இணைந்­துள்­ளனர். இதற்­கான பொது­வான இணக்­கப்­பாடும் எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  இணைந்த வடக்கு, கிழக்கில்  சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வு உட்­பட தமிழ் மக்­களின்  அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யுறுத்தும் வகையில் 13 அம்­சங்­களைக் கொண்ட ஆவ­ணத்­தி­லேயே இந்த ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

பொறுப்­புக்­கூறும் விடயம் தொடர்­பிலும் இதில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.  தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய தீர்வு தொடர்­பிலும் ஏனைய பிரச்­சி­னைகள் குறித்தும் பொது நிலைப்­பாடு உரு­வா­கி­யி­ருக்­கி­றது.  ஆனால் தற்­போ­தைய நிலையில் இந்த பொது  இணக்­கப்­பாட்டு ஆவ­ணத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அனைத்து விட­யங்­க­ளையும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும்  பிர­தான வேட்­பா­ளர்கள் முழு­மை­யாக  ஏற்­றுக்­கொள்­வார்­களா என்ற கேள்வி எழு­கின்­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும்.  அதற்­கான பொது இணக்­கப்­பாட்­டுடன்  பிர­தான வேட்­பா­ளர்­க­ளுடன்  பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு நடத்­தப்­பட்டு தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை காண்­பது தொடர்பில் சாத­க­மான நிலைப்­பாட்டைக் கொண்ட வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பதன் மூலம் அடுத்த கட்­டத்­திற்கு முன்­ன­கர்­வதே தற்­போ­தைக்­குள்ள  சிறந்த வழி­யாக அமையும்.

ஏனெனில் ஜனா­தி­ப­தி  தேர்­தலில்  வெற்­றி­பெ­ற­வேண்­டு­மானால்  தென்­ப­குதி சிங்­கள மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களை பெற­வேண்­டி­யது என்­பது இன்­றி­ய­மை­யா­த­தாகும். அவ்­வாறு பெரும்­பான்மை மக்களின் வாக்குகளின்றி வெற்றிபெறுவது என்பது வெறும் பகற்கனவேயாகும்.  

எனவே  ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக இருக்கலாம். அல்லது பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக இருக்கலாம். தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கான இணக்கத்தை உடனடியாக தெரிவிக்கப்போவதில்லை. இந்த பொது ஆவணத்தில் உள்ள விடயங்களை  முழுமையாக நிறைவேற்றப்போவதாக  கூறப் போவதுமில்லை.

இதனை உணர்ந்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு சாதகமாக பதிலளிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் பொது இணக்கத்திற்கு வருவேதே  இன்றைய நிலையில் சாதகமான பலனை வழங்கும்.  இந்த விடயத்தில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஓரளவிற்கு புரிந்துணர்வுடன் உள்ளதாகவே தெரிகின்றது.  தேர்தலை பகிஷ்கரிப்பதன் மூலமோ, அல்லது நடுநிலை வகிப்பதன் மூலமோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியாது.  இதனைக் கவனத்தில் கொண்டு இணக்கப்பாட்டு முயற்சி தொடர்வதற்கு ஐந்து கட்சிகளின் தலைவர்களும்  அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும்.