ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளராகும்  எந்தவிதமான முயற்சிகளையும் தான் முன்னெடுக்கவில்லை என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வதந்திகள் பரவியது. 

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே முரளிதரன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், அவ்வாறு வெளிவந்த செய்தியும் உண்மைக்கு புறம்பானது எனவும், இருப்பினும் தேர்தலில் தனது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.