(நா.தினுஷா)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரான மூன்றரை வருடங்களில் சுமார் 33 ஆயிரம் பேர் அதனை பயன்படுத்தி தகவல் அறிவதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். 

அதற்கமய இலங்கை ஆய்வு நிறுவனத்தினால் (சேர்வே ரிசர்ச் லங்கா ) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் 73 வீதமானோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.  

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு கடந்த ஒருமாத காலமாக வெகுசன ஊடக அமைச்சு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விளிப்புணர்வு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. 

அந்த விளிப்புணர்வு வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.  

நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  சிறப்பாக பயன்படுத்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை  கௌரவித்து  விருதுகளும் வழங்கப்பட்டன. இதன் சிறப்பு விருதுகளை  தரிந்து ஜெயவர்தனவும் திலீப் அமிர்தனும்  பெற்றுக்கொண்டனர். தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து இலங்கை ஆய்வு நிறுவனத்தினால்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.