(நா.தனுஜா)

பெருந்தோட்ட மக்களை கள்ளத்தோணி, நாடற்றவன் என்று அழைத்த யுகத்தை மாற்றி, எமக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்து, இன்று நாமும் இந்த நாட்டின் பிரஜைகளே என்ற கௌரவத்தை ரணசிங்க பிரேமதாஸவே பெற்றுக்கொடுத்தார்.

இன்று நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் என்ற எவ்வித இன,மத பாகுபாடுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதற்காகவே அவருடைய மகனான சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்று விசேட பிரதேசங்கள் அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகளையும், மலையகம் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 அம்சக்கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்துரைத்திருக்கின்றோம்.

அதன்படி இதுகுறித்து ஒரு பிரத்யேக ஜனாதிபதி செயலணியை அமைத்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்வளிப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெரணியகல நகரில் இன்று இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்கினால், அவருக்கு வாக்களிப்போம் என்று கடந்த ஒருமாதகாலத்திற்கு முன்னர் அனைவரும் கேட்டுக்கொண்டனர். 

இப்போது அவரை வேட்பாளராகக் களமிறக்கிவிட்டோம். அவருக்கு வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் என்ற எவ்வித இன,மத பாகுபாடுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.