பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பான கர்ப்பப்பை அடிவயிற்றுப் பகுதியினுள் பல தசைகளினதும் தொகுப்பிழையங்களினதும் உதவியுடன் தாங்கப்பட்டுள்ளது. இத்தாங்கும் இழையங்களின் பலவீனத்தால் கர்ப்பப்பை சற்றுக் கீழிறங்கி கர்ப்பப்பை இறக்கமாக மாறுகின்றது. (Womb Prolapse) இது பெண்களைப் பொறுத்தவரை மிகவும் ஒரு அசெளகரியமான நிலை. இதற்குப் பல எளிய முறையிலான தீர்வுகள் உள்ளன. ஆனால் பல பெண்கள் இதனை கூச்சத்தினாலும் வெட்கத்தினாலும் மற்றவர்களிடம் வெளிப்படுத்தாது இருப்பதுடன் இதற்கான சிகிச்சைகளும் சற்றுச் சிக்கல் நிறைந்தவையாக இருக்குமென நினைத்து தாமே இதனை இறுதி வரையில் தமக்குள்ளேயே அனுபவித்து வாழ்பவர்கள் பலருள்ளனர். ஆனால் இறுதியில் அவர்கள் மிகவும் முதுமையடைந்த பின்னர் இக் கர்ப்பப்பை இறக்கத்தினால் ஏற்படும் சிக்கல்களினால் அவதிப்படுவது மட்டுமல்ல அவரைக் கூட இருந்து பராமரிக்கும் அவரது உறவினர்களும் இடர்ப்படும் இன்னல்களில் பங்கெடுக்க நேரிடுகின்றது. அதாவது தகுந்த நேரத்தில் இந்த கர்ப்பப்பை இறக்கத்தை தகுந்த முறையில் கையாண்டு சரியான தீர்வுகளை வழங்காது தவறுவோமேயானால் இறுதிக்காலத்தில் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

ஆகையால் இந்தக் கர்ப்பப்பை இறக்கமானது பெண்களது வாழ்க்கைக் காலத்தில் எதிர்கொள்ளும் முக்கிய விடயம். இதனை எவ்வாறு கையாண்டு பெண்களுக்குள்ள சிக்கல்களைத் தீர்ப்பதென ஆராய்வோம்.

கர்ப்பப்பை இறக்கத்திற்கான காரணங்கள்

கர்ப்பப்பையைத் தாங்கும் இழையங்களும் தசைகளும் பலவீனமடைய இந்தக் கர்ப்பப்பை இறக்கத்திற்கான மூலகாரணமாகும். இது சிலருக்கு பரம்பரையாகவே பலவீனமான இழயங்களைக் கொண்டிருப்பதால் நடுத்தர வயதைத் தாண்டும் போது ஏற்படலாம்.

எனினும் பொதுவான காரணமாக பல குழந்தைகளை சாதாரண பிரசவம் மூலம் பெற்றெடுத்த தாய்மாருக்கு அதிலும் மிகவும் கடினமான நீண்ட நேரம் பிரசவங்களை எதிர்கொண்ட பெண்களில் கர்ப்பப்பையைத் தாங்கும் இழையங்கள் காயப்பட்டு பலவீனமடைவதால் ஏற்படுகின்றது. அடுத்ததாக மெனோபோஸ் பருவத்தை அடைந்த பின் பெண்களில் ஓமோன்களின் குறைபாட்டினால் இழையங்கள் பலவீனமடைவதால் இந்நிலை ஏற்படலாம். இவ்வாறான கர்ப்பப்பை இறக்கங்களை மேலும் தீவிரப்படுத்தும் காரணிகளாக நாட்பட்ட இருமல் மலச்சிக்கல் என்பன பங்களிக்கின்றன.

கர்ப்பப்பை இறக்கத்தின் வகைகள்

கர்ப்பப்பை இறங்குவது போல் யோனி வாசல் வழியாக சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி, மலக்குடல் என்பனவும் கீழிறங்கி வீக்கமாக காணப்படும். கர்ப்பப்பை இறக்கமும் பல நிலைகளாக ஆரம்ப நிலை, இடைப்பட்ட நிலை, பிந்திய நிலை எனும் கட்டங்களாக காணப்படும். சிலரில் கர்ப்பப்பை இறக்கம் மட்டும் காணப்படும். சிலரில் கர்ப்பப்பை இறக்கத்துடன் சேர்த்து சிறுநீர்ப்பை இறக்கம், மலக்குடல் இறக்கம் போன்றன காணப்படும். வேறு சிலரில் கர்ப்பப்பை இறக்கம் இல்லாமல் சிறுநீர் இறக்கம் அல்லது மலக்குடல் இறக்கம் காணப்படும்.

கர்ப்பப்பை இறக்கத்தினால் ஏற்படும் நோய் அறிகுறிகள்

கர்ப்பப்பை இறக்கம் உள்ளவர்களில் யோனிவாசல்ப் பகுதியில் ஒரு வீக்கம் போன்று காணப்படும். இதன்போது நோவோ வலியோ ஏற்படுவதில்லை. அத்துடன் இந்த வீக்கம் காலையில் எழுந்தவுடன் மிகவும் குறைவாகவும் மாலை வேளைகளிலும் கூடியளவு வேலை செய்கின்ற வேளைகளிலும் இது தெளிவாகத் தெரியும். சிலவேளைகளில் இந்தக் கர்ப்பப்பை இறக்கப் பகுதியில் புண் போன்றன ஏற்பட்டு இரத்தம் அல்லது திரவம் போன்றன வடிதல் ஏற்படும். ஆனால் இவை எதுவும் புற்றுநோய்கள் அல்ல. சிறுநீர்ப்பையும் சேர்ந்து இறங்கியுள்ளவர்களில் சிறுநீர் கழிப்பதில் சிக்கல்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருமலுடன் தும்மும் போதும் சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளியேறுதல் போன்றன ஏற்படும். மேலும் மலக்குடல் பகுதி இறங்கியுள்ளவர்களில் மலங்கழிப்பதில் கடினங்கள் மலம் பூரணமாகக் கழிக்கப்படாமை போன்ற உணர்வுகள் ஏற்படும்.

கர்ப்பப்பை இறக்கத்திற்கு எவ்வாறான சிகிச்சை முறைகள் உள்ளன?

இதற்கான சிகிச்சைகள் பிரதானமாக இருவழிகளில் மேற்கொள்ளப்படும். அதாவது கர்ப்பப்பை இறக்கத்தை உயர்த்தி அதனால் தாங்கக்கூடிய வளையங்கள் (Pessary) போடப்படலாம். இதன் பின் இவற்றை

3 மாதங்களுக்கு ஒரு தடவை மாற்ற வேண்டும். இதன்போது சத்திர சிகிச்சைகள் தவிர்க்கப்படலாம். ஆகையால் இந்த வளையங்கள் போடப்படும் முறை சத்திர சிகிச்சைக்கு தாக்குப்பிடிக்க முடியாத உடல்வாகைக் கொண்டவர்களுக்கும் சத்திர சிகிக்சைக்கு தயங்குபவர்களுக்கும் சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் காலப்பகுதியிலும் பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படும் தற்காலிக கர்ப்பப்பை இறக்கத்திற்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கத்திற்கும் பெரிதும் உதவியளிக்கும் சிகிச்சை முறையாக காணப்படுகின்றது.

மற்றைய சிகிச்சை முறையாக சத்திர சிகிச்சை முறை உதவியளிக்கும். இதிலும் கர்ப்பப்பையை முற்றாக அகற்றாமல் செய்யப்படும் சத்திரசிகிச்சை கர்ப்பையை முற்றாக அகற்றும் சத்திர சிகிச்சையென இரு வகைகள் உள்ளன. இது ஒருவர் தனது குடும்பத்தை முடித்துக் கொள்வதா அல்லது இல்லையா என்பதனைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். இந்த சத்திர சிகிச்சைகளில் சிறந்தது கர்ப்பப்பை அகற்றி இடுப்பு பகுதி தசைகளை மறுசீரமைக்கும் சத்திர சிகிச்சையே சிறந்தது. இது ஒருவரை முழுதாக மயக்காமல் முதுகுப்பகுதியில் ஊசி ஏற்றி உடம்பின் கீழ்ப்பகுதியை விறைக்கப்பண்ணுவதன் மூலம் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மிகவும் வயது கூடிய பெண்களில் கூட எந்தவித சிக்கலின்றி இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.

நீரிழிவு நோய் உயர் குருதியமுக்கம் போன்றன உள்ளவர்களில் இவ்வாறான சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியுமா?

ஆம் மயக்க மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களினால் ஒருவரை முழுதாக மயக்காமல் உடம்பின் கீழ்ப்பகுதி மட்டும் விறைப்பை ஏற்படுத்தி இந்த சத்திர சிகிக்சை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதால் இவர்களில் எந்தசிக்கலும் இன்றி நாம் மேற்கொள்ள முடியும். மிகவும் வயது கூடிய 70 - 80 வயதுடைய பெண்களில் கூட இவ்வாறான கர்ப்பப்பை இறக்கத்திற்கு இந்த வகை சத்திர சிகிச்சை மேற்கொண்டு அவர்களது இறுதிக்காலத்தில் அவர்களுக்கு நிம்மதியான உடல் நலத்தைக் கொடுக்க முடியும். எனவே கர்ப்பப்பை இறக்கம் பெண்களது வாழ்வில் சிலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை. இதற்குரிய சிகிச்சைகள் பெறுவதன் மூலம் அவர்கள் அசெளகரியங்களை போக்க முடியும். சத்திரசிகிச்சைகளை நினைத்து நாம் கற்பனையில் பயந்து ஒதுங்குவதன் மூலம் இறுதிக்காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களும் பல சிரமங்களை அனுபவிப்பதுடன் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் ஒரு பெரிய இடையூறாக இருக்க முடியும்.

எனவே தகுந்த நேரத்தில் தகுந்த தீர்வை பெறுவதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படப் போகும் கடினங்களைப் போக்க முடியும்.