(ஆர்.யசி)

கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்து வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனைக் கூறினார். 

கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிப்பதாக அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக என்பது குறித்தும் நாம் தீர்மானமெடுக்க காலம் உள்ளது. இப்போது பிரதான வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக முன்வைத்து வருகின்றனர். ஆகவே இன்னமும் சிறிது நாட்களில் தமிழ் மக்களின் தலைமைகள் என்ற வகையில் நாம் மக்களுக்கு ஏற்ற தீர்மானம் ஒன்றினை எடுப்போம். 

தமிழ் மக்கள் எம்மை பிரதிநிதிகளாக தெரிவு செய்து அரசியல் களத்தில் எம்மை இறக்கியுள்ள நிலையில் எமது மக்களை கைவிட்டு சுயநல அரசியல் செய்ய எம்மால் முடியாது. நாம் எப்போதும் எமது மக்கள் நலன்கள் சார் விடயங்களையே முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.