கட்டலோனியாவின் பிரிவினை போராட்ட தலைவர்கள் ஒன்பது பேரிற்கு எதிராகதேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ஸ்பெயின் நீதிமன்றம் அவர்களிற்கு நீண்ட கால சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2017 இல் இடம் பெற்ற சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பின் போது அவர்களின் நடவடிக்கைகளிற்காகவே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் துணை ஜனாதிபதி ஒரியோல் ஜன்குயரசிற்கு தேசத்துரோகம் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸ்பெயின் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

அவர் 13 வருடங்களிற்கு அரசியல்ரீதியிலான பதவிகளை வகிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்டலானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரிற்கும்  பிராந்தியத்திய அரசாங்கத்தின் முன்னாள் பேச்சாளருக்கும் ஸ்பெயின் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

முன்னாள் சபாநாயகரிற்கு 11 வருட சிறைத்தண்டனையையும் உள்துறை அமைச்சரிற்கு பத்து வருட சிறைத்தண்டனையையும் வழங்கியுள்ள நீதிமன்றம் கட்டலோனிய சுதந்திர செயற்பாட்டாளர்கள் இருவருக்கு ஏழு வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

கட்டலோனியாவின் சுதந்திரத்திற்காக குரல்கொடுத்த ஏனைய தலைவர்களுக்கும் ஸ்பெயின் நீதிமன்றம் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஸ்பெயினின் சமீப காலவரலாற்றின் மிகவும் அரசியல் நெருக்கடிகளிற்கு பின்னர் இடம்பெற்ற நான்கு மாதகால விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் துணை ஜனாதிபதி ஜன்கிரியுஸ் கட்டலோனியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை கைவிடவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் முன்னரை விட அதிக நம்பிக்கையுடனும் வலுவாகவும் திரும்பி வருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி தொடர்ந்து போராடுங்கள் ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டலோனியாவின் சுதந்திரத்திற்கான கோரிக்கைகள் ஸ்பெயினை மிக மோசமான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கச்செய்திருந்தன.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து செல்வதற்கான முயற்சிகளை கட்டலோனியா தோல்வியடைந்ததை தொடர்ந்து அதன் சுயாட்சி இரத்து செய்யப்பட்டது.

கட்டலோனியாவின் சமீபத்தைய வரலாறு

கட்டலோனியா என்பது ஸ்பெயினின் வடகிழக்கில் உள்ள அரைசுயாட்சி பகுதியாக காணப்பட்டது.

கட்டலோனியா ஆயிரம் வருட கால வரலாற்றை கொண்டது.

கட்டலோனியா 7.5 மில்லியன் மக்களையும் சொந்த மொழி தேசிய கொடி தேசிய கீதம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கட்டலோனிய தேசியவாதிகள் நீண்டகாலமாக தங்கள் பகுதிகளில் இருந்து ஸ்பெயினின் வறிய பகுதிக்கு அதிக பணம் செல்வதாக கருத்து வெளியிட்டு வந்தனர்.

தங்களிற்கு வழங்கப்பட்ட சுயாட்சியில் ஸ்பெயின் செய்த மாற்றங்கள் தங்கள் இனத்துவ அடையாளங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

2017 ஒக்டோபரில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் 90 வீதமான மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவை வெளியிட்டனர்.

எனினும் 43 வீதமான மக்களே வாக்களித்திருந்த அதேவேளை ஸ்பெயின் இந்த சர்வஜனவாக்கெடுப்பை சட்டவிரோதமானது என அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து 2017 ஒக்டோபர் 27 ம் திகதி கட்டலோனியாவின் ஆட்சியாளர்கள் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர்.

இதன் காரணமாக சீற்றமடைந்த ஸ்பெயின் கட்டலோனியாவிற்கான விசேட அதிகாரத்தை இரத்து செய்ததுடன் நேரடி ஆட்சியை அறிவித்தது.

கட்டலோனிய அரசியல்தலைவர்களை பதவி விலக்கிய ஸ்பெயின்  நாடாளுமன்றத்தை கலைத்தது.

கிளர்ச்சியை தூண்டினார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளான கட்டலோனிய  ஜனாதிபதி கார்லெஸ் புய்க்டெமொன்ட் நாட்டை விட்டு தப்பியோடினார்,எனினும் 12 அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.