(நா.தனுஜா)

கோத்தாபாய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர மற்றும் காமினி வெயங்கொட ஆகியோரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உயிரச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தனிநபர்கள் 165 பேரும், 21 மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் கையெழுத்திட்டு ஊடக அறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கோத்தாபாய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி வழக்குத்தாக்கல் செய்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர மற்றும் காமினி வெயங்கொட ஆகியோருக்கு எதிராக விடுக்கப்பட்டுவரும் உயிரச்சுறுத்தல்கள், நாட்டின் உரிமைகள் மற்றும் நீதியை முன்னிறுத்தி செயற்பட்டுவருவோரின் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உரிய அதிகாரிகள் விரைவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டும். அதேபோன்று இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அச்சுறுத்தல் செயற்பாடுகளில் இருந்து கோத்தாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.