‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பாணா காத்தாடி, செம போத ஆகாதே ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இவருக்கு ஜோடியாக பின்னணி பாடகியும், முன்னணி நடிகையுமான ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் பாலசரவணன். ரோபோ ஷங்கர். முனிஸ்காந்த். விஜி. சந்தானபாரதி. ஆடுகளம் நரேன். ரேகா. லிவிங்ஸ்டன். எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 17ஆம் திகதியன்று சென்னையில் தொடங்குகிறது என்றும், அதன்பிறகு சென்னை, கொடைக்கானல், கேரளா, குஜராத், சிக்கிம் ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், இந்தப் படத்தின் கதை பயணத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.

நடிகர் ரியோ ராஜ் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பது திரை உலகில் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.