(க.கிஷாந்தன்)
தலவாக்கலை – லிந்துலை ஊவாக்கலை 3ஆம் இலக்க தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தின் காரணமாக 10 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் இடம்பெயர்ந்து தோட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நேற்று மாலை பெய்த கடும் மழையினால் 10 வீடுகளை கொண்ட லயன் தொகுதிக்கு முன்னால் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டதுடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.


இதனால் இக்குடியிருப்பு பகுதியில் வசித்த இவர்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு இயற்கை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நுவரெலியா பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தோட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடாகவும், இராணுவ படையினர் மூலம் கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்களுக்கான உணவுக்கான பொருட்களை பிரதேச செயலகத்தின் ஊடாக கிராம சேவகர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.


இக் கூடாரங்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக இருப்பதனால் இவர்களுக்கான பால்மா மற்றும் ஏனைய பொருட்கள் தேவைப்படுவதாக பாதிக்கப்பட்ட இவர்கள் தெரிவிக்கின்றனர்.