ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச வெற்றி பெற வேண்­டு­மென்­பதை மக்கள் முன்­கூட்­டியே  தீர்­மா­னித்து விட்­டார்கள்.  அதே­போன்று தேர்தல் திகதி அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே தமிழ் முற்­போக்கு கூட்­டணி உறு­தி­யான தீர்­மா­னத்தை எடுத்து அதற்­கான அழுத்­தத்தைக் கொடுத்­தி­ருந்­தது. 

இப்­போது சஜித் பிரே­ம­தாசவின் வெற்­றிக்கு கைக்­கொ­டுக்க எமது கூட்டணி கள­மி­றங்­கி­யுள்ளது என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் நம்­பிக்கை தெரி­வித்தார்.

 அமைச்சர் திகாம்­பரம் நேற்று நுவ­ரெ­லியா செல்லும் வழியில் அட்டன் நிக்­ரோ­மா­தா­ராய பௌத்த விகா­ரைக்கு சென்று வழி­பாடு மேற்­கொண்­டி­ருந்தார். வழி­பாடு செய்த பின்னர் விகா­ரா­தி­பதி விம­ல­நா­யக்க தேரரை சந்­தித்தார். 

அப்­போது அமைச்சர் திகாம்­பரம் கடந்த ஜன­வரி மாதம் 10 ஆம் திகதி தமது பிறந்த தினத்­தன்று மேற்­படி விகா­ரைக்கு வந்­தி­ருந்த போது, 50 ஆண்­டுகள் பழைமை வாய்ந்த விகா­ரையின் கூரை உட்­பட திருத்த வேலை­க­ளுக்­காக 50 இலட்சம் ரூபா நிதியை வழங்கி உத­வி­ய­மைக்­காக நிர்­வாகக் குழுவின் சார்பில் நன்றி தெரி­விக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்­கினார். 

நிகழ்வில் மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், சப்ர­க­முவ பிர­தேச சபை முன்னாள் தலைவர் ஜி. நகு­லேஸ்­வரன் மற்றும் நகர சபை, பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் பலரும் கலந்து கொண்­டனர்.

 அமைச்சர் தொடர்ந்தும்   ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்,

   ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு தெரி­விப்­பது என்­பதில் தொழி­லாளர் தேசிய சங்­கத்­துக்கோ அல்­லது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கோ  எந்தவித­மான தடு­மாற்­றமும் கிடை­யாது.

 தேர்தல் திகதி அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே தமிழ் முற்­போக்கு கூட்­டணி உறு­தி­யான தீர்­மா­னத்தை எடுத்து அதற்­கான அழுத்­தத்தைக் கொடுத்­தி­ருந்­தது. அந்த வகையில் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றிக்கு கைக்­கொ­டுக்க கள­மி­றங்­கி­யுள்ளோம்.

  2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஐக்­கிய தேசியக் கட்சி நிறுத்­தி­யது. அந்த நேரத்தில் மலை­யக மக்­க­ளுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடு­களை அமைத்துக் கொடுக்­கவும் அவற்­றுக்­கான காணி உரிமைப் பத்­தி­ரங்­களை வழங்­கவும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப பிர­தேச சபை­களை அதி­க­ரிக்­கவும் பிர­தேச செய­ல­கங்­களை அமைக்­கவும் மலை­யக அபி­வி­ருத்­திக்­கென தனி­யான அபி­வி­ருத்தி அதி­கார சபையை உரு­வாக்­கவும் கோரிக்­கை­களை முன்­வைத்து அவற்றை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கொண்டு வந்தோம். அத்­தோடு, நாம் தேர்தல் காலத்தில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை படிப்­ப­டி­யாக நிறை­வேற்றிக் காட்­டினோம்.

  மலை­யக பெருந்­தோட்ட மக்கள் காலங் கால­மாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வாக்­க­ளித்து வந்த போதிலும் அவற்றின் சேவை­களை பெற்றுக் கொள்ள முடி­யாமல் இருந்­தது. எனவே, அதற்குத் தடை­யாக இருந்த பிர­தேச சபை சட்­டத்­திலும் திருத்­தங்­களை கொண்டு வந்து பிர­தேச சபையின் சேவை­களை தோட்ட மக்கள் பெற்றுக் கொள்ள வழி­வ­குத்தோம். 

தனி வீட்டுத் திட்­டத்­தோடு பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு உலக வங்­கியின் உத­வி­யோடு சுத்­த­மான குடிநீர் திட்­டங்கள், விளை­யாட்டு மைதானங்கள், கார்ப்பெட் பாதைகள் போன்ற அடிப்­படை தேவைகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

   கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் நாம் முன்­வைத்­தி­ருந்த பல கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. அதன் தொடர்ச்­சி­யாக இன்னும் பல வேலைத் திட்­டங்­களை நிறை­வேற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச­வுடன் சந்­திப்­பு­களை மேற்­கொண்டு தெளிவுபடுத்­தி­யுள்ளோம். 

அவர் ஜனா­தி­பதி செய­லணி ஒன்றை அமைத்து அதன் ஊடாக பல்வேறு பிரச்­சி­னை­களுக்கும் தீர்வு காண இணக்கம் தெரி­வித்­துள்ளார். எனவே, நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச வெற்றி வாகை சூட நாம் முன்­னின்று பாடு­படத் தீர்­மா­னித்து விட்டோம். எமது மக்­களும் தயா­ராக இரு­க்கின்­றார்கள்.

  மேலும், சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி நாட்டு மக்­களால் ஏற்­க­னவே உறுதி செய்­யப்­பட்டு விட்­டது. அதில் எந்த வித­மான மாற்­றமும் கிடை­யாது. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெறு­வ­தற்கு நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்து 75 வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன. மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு 50 ஆயிரம் வாக்­குகள் மாத்­தி­ரமே கிடைத்­தி­ருந்­தன.  அதே­போன்று இவ்­வாண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு 2 இலட்­சத்­துக்கும் அதி­க­மான வாக்­குகள் நிச்­சயம் கிடைக்கும். 

அவர் அமோக வெற்றி பெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. மலையகத்தில் உள்ள ஏனைய அமைப்புகள் அவற்றின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானத்தை மேற்கொள்ளும் போது அது தொடர்பில் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தொடர்ச்சியாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.