(செ.தேன்மொழி)

கிளிநொச்சி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி கலால் திணைக்களத்திற்கு தகவல் வழங்கும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறிவியல்நகர் பகுதியில் இன்று காலை 6.20 மணியளவில் பொலிஸாரின் ஆணையை கவனத்திற் கொள்ளாது சென்ற ஜீப் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கிளிநொச்சி-அறிவியல்நகர் பகுதியில் ஜீப் ரக வாகனத்தில் பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான ஜீப் வாகனத்தை நிறுத்துமாறு சமிஞ்ஞை செய்தும் அது நிறுத்தாமல் சென்றுள்ளது. 

இதனை தொடர்ந்து  பொலிஸார் சந்தேகத்திற்கிடமான குறித்த ஜீப்பின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஜீப்பில் சென்ற நபரொருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கலால் திணைக்களத்திற்கு தகவல் வழங்கும் நபரொருவரே காயமடைந்துள்ளதுடன், குறித்த ஜீப்பில் கலால் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே பயணித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.