ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் புயல் காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்ளிட்ட 7 பிராந்தியங்களை சேர்ந்த 42 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 14 ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்தப் புயலும், பெருமழையும் கிழக்கு ஜப்பானில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 இலட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாது இருளில் மூழ்கி உள்ளன. 14 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

நிலச்சரிவால்தான் பலரும் பலியானதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரக்பி உலக கிண்ண போட்டியில் நமீபியா, கனடாவுக்கும் இடையே நேற்று நடக்க இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.