பாக்கிஸ்தானில் இலங்கை அணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்து குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஏமாற்றம்வெளியிட்டுள்ளதாக ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானில் வீரர்களிற்கு வழங்கப்பட்ட கடும் பாதுகாப்பு குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் சமிசில்வா இவ்வாறான பாதுகாப்பிற்கு மத்தியில் டெஸ்ட்போட்டிகளில் விளையாடமுடியுமா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியை அனுப்பியமைக்காக பாக்கிஸ்தான் நன்றி வெளியிட்டுள்ளது ஆனால் ஐந்து நாட்களும் வீரர்கள் ஹோட்டலிற்குள் இருக்கவேண்டும் என்பதால் டெஸ்ட்போட்டியில் விளையாடுவது சாத்தியமா என நாங்கள் ஆராயவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மூன்று நாட்கள் ஹோட்டலிற்குள்ளேயே இருந்ததே எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது,வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிற்கு இது எந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளது என சமி சில்வா தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஐசிசி டெஸ்ட் சம்பியன்சிப் போட்டிகளில் விளையாடப்போகின்றோம் நாங்கள் சிறப்பாக விளையாடவேண்டும் என்பதை கருத்தில் எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டலில் வீரர்கள் தங்கள் மனைவிமார்கள் இல்லாமல் தங்கியிருந்தால் அணி வீரர்கள் மத்தியில் நல்ல பிணைப்பு ஏற்படும் அதிக சுதந்திரம் வீரர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம் என குறிப்பிட்டுள்ள சமி சில்வா அதேவேளை வீரர்கள் வெளியில் செல்லவேண்டியதும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த கருத்துகுறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை வீரர்கள் பொருட்கொள்வனவிற்கு செல்வதற்கும் கோல்ப் விளையாடுவதற்கும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குமான பாதுகாப்பினை வழங்க நாங்கள் முன்வந்தோம் ஆனால் இலங்கை அதிகாரிகளே அதனை நிராகரித்தனர் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.