மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபை நடத்தும் 'கரிபியன் பிரீமியர் லீக்' போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியை வீழ்த்தி பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆகியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமான இத் தொடரில் ஆறு அணிகள் கலந்துகொண்டதுடன், மொத்தமாக 34 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இத் தொடரின் இறுதிப் போட்டியானது இன்றைய தினம் டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் ஜோசன் ஹொல்டர் தலைமையிலான பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும், சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வோரியர்ஸ் அணிக்கிடையிலும் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது. 

ஜோசன் கார்லஸ் 39 ஓட்டத்தையும், அலெக்ஸ் ஹெலிஸ் 28 ஓட்டத்தையும், ஜொனாதன் கார்ட்டர் 50 ஓட்டத்தையும் அதிகபடியாக எடுத்தனர். 

172 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கயானா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 27 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவினர். 

பிராண்டன் கிங் 43 ஓட்டத்தையும், நிகோலஷ் பூரண் 24 ஓட்டத்தையும், கீமோ பவுல் 25 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் பார்படாஸ் அணி சார்பில் ரேமான் ரீஃபர் 4 விக்கெட்டுக்களையும், ஹாரி கர்னி, ஆஷ்லே நர்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும், ஹேடன் வால்ஷ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணியினர் கரிபியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

போட்டியின் ஆட்ட நாயகனாக  ஜொனாதன் கார்ட்டரும் தொடரின் ஆட்ட நாயனாக ஹேடன் வால்ஷும் தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.