ஒவ்வொரு தம்பதியினரும் தம் வாழ்வினை அர்த்தமுடையதாக உணரக்கூடிய ஒரு நொடி தாம் ஈன்றக் குழந்தையின் முகத்தை பார்க்கும் அந்த கணமென்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட விலைமதிப்பற்ற வைரத்தை வீதியில் எறிந்து செல்லும் அவலங்களும் வெளிநாடுகளில் மாத்திரமன்றி நமது நாட்டிலும் நடந்தேறி வருகிறது.
இந்நிலையில் சரியானதொரு குடும்பத்திட்டமிடல் முறையை பேணாமை, தவறான உறவால் குழந்தைப் பெற்றல் போன்ற விடயங்கள் நமது சமூகத்தில் ஒரு சாபக் கேடாகவே பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாகவே மேற்கண்டவாறு சர்ச்சைக்குரியதும், சங்கடத்திற்குரியதுமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இத்துயரங்களை சரியான குடும்பத்திட்ட முறையொன்றினால் மட்டுமே இல்லாதொழிக்கலாம்.
செப்டெம்பர் 26 ஆம் திகதி உலகக் கருத்தடை தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. இத்தினத்தில் சமூகத்திற்கு ஓர் சிறந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் வைத்தியரும் மகப்பேற்று நிபுணருமான வைத்திய கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் வீரகேசரி வார வெளியீட்டிற்கு வழங்கிய செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு.
கேள்வி : கருத்தடை குறித்து வைத்தியர் என்ற ரீதியில் உங்களது தெளிவுபடுத்தல் என்ன ?
பதில் : தற்காலத்தில் கருத்தடை என்ற சொல்லை நாம் மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக 'குடும்பத்திட்டமிடல் முறை' என்ற சொல்லையே நாம் பயன்படுத்துகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் தமது குடும்பம் பற்றியும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் தீர்மானிக்கும் உரித்துடையவர்கள். இதன்பால் தங்களது குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை முடிவு செய்து தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் ஒரு முறையே 'குடும்பத்திட்டமிடல் முறை' என நாம் வரையறுக்கிறோம்.
இதன்மூலம் கர்ப்பம் என்பது குழந்தை தேவையென கருதும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் கருவுற்றலின் ஊடாக தாயின் உடல், உள ஆரோக்கியத்தையும் பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் சீராக மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் துணை புரியுமென நான் கருதுகிறேன். அத்தோடு ஒரு பெண் ஏற்கனவே கருத்தரித்து குழந்தை பெற்றிருப்பாராயின், அடுத்த குழந்தையை பெற்று கொள்வதற்கான கால இடைவெளியை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக நிர்ணயிப்பது குழந்தையின் சீரான ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு செலுத்தும். அத்தோடு இக்குடும்பத்திட்ட முறைகளினால் நிரந்தரமாக குழந்தை இல்லாமல் போகும் வாய்ப்புக்களும் உண்டா என்பது பற்றி பல சர்ச்சைக்குரிய வினாக்களும் எழுப்பப்பட்டுகின்றன.
உண்மையில் குடும்பத்திட்ட முறை பிரதான மூன்று நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது. அதில் முதல் நோக்கம் தம்பதியினரின் முதலாவது கர்ப்பத்தை தள்ளி போடுவதாகும். உதாரணமாக, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி தனது படிப்பை நிறைவு செய்யும் வரையில் தான் கர்ப்பமாவதை தள்ளி போடுவதை குறிக்கும். 2ஆவது நோக்கம் இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ கர்ப்பமடையும் போது முதலாவது குழந்தை பெற்ற பின்னர் அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்வதற்கான கால அளவை 01 அல்லது 2 வருடங்களுக்கு பின்னர் திட்டமிடலாகும்.
3 ஆவது முறையாவது எமக்கான குழந்தைகள் போதுமென தீர்மானித்ததன் பின்னர் நிரந்தரமாக குடும்பத் திட்ட முறையையோ அல்லது குடும்பதிட்ட முறைகளில் மிகவும் நம்பகரமான முறையொன்றை கையாள்வதன் மூலமாகவோ தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்கான முறைகளாகும். இம்முறையை பொதுவாக சத்திர சிகிச்சை மூலமும் மேற்கொள்ளலாம் .
இதைவிட கர்ப்பத்தை தவிர்க்கவோ அல்லது கர்ப்பக்கால அளவுகளை நீடிக்கவோ பல்வேறு வகையான குடும்பத்திட்டமிடல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு சில முறைகள் ஆண்களால் பயன்படுத்தப்படும் ஆணுறைகள் பெண்களால் பயன்படுத்தப்படும் நம் நாட்டு பாவனையிலுள்ள சில தரமான மாத்திரைகளை தினமும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக 'டீபோ புரோவீரா ' என்ற மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கையில் ஏற்றப்படும் ஊசிமுறையினை கூறலாம். பல நவீன முறைகளும் தற்போது பாவனையில் உண்டு. இம்முறைகளால் சுமார் 3 – 5 வருடங்கள் வரை தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம். நவீனமடைந்து வரும் மருத்துவ உலகில் சரியானதும் நம்பகத் தன்மையுடையதுமான முறையை கையாண்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
கேள்வி:- தற்போது வீதிகளிலும், குப்பைக்கூழங்களிலும் வீசியெறியப்படும் சிசுக்களின் தொகை அதிகரித்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்து என்ன? இதில், குடும்பத்திட்டமுறை எவ்வாறு பங்களிப்பு செய்கிறது?
பதில்:- பிள்ளைப்பேறு என்பது ஒரு குடும்பத்தினரால், கொண்டாடப்படக்கூடியதும், குடும்பத்திற்கு வரவுள்ள புதிய வரவெனக்கருதி மட்டற்ற மகிழ்ச்சியடையக் கூடியதுமான ஓர் விடயமாகும். மாறாக ஒரு சமூக கட்டமைப்பிற்கு புரள்வானதும், தவறான உறவால் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பங்களில் அதனை ஒரு குடும்பத்தாலோ, சமூகத்தினராலேயோ அக்குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எமது சமூக மட்டத்தில் வளரவில்லை. ஒரு திருமணமாகாத பெண்ணோ, திருமணமாகி கணவனை இழந்த பெண்ணொருவரோ கர்ப்பம் தரிக்கும்பொழுது, கர்ப்பத்தை மறைக்க சில சமயங்களில் முயற்சித்தாலும் கூட தோல்வியடையும் பட்சத்தில், பிரசவித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தினால், குழந்தையை பிரசவித்த பின்னர், உயிருடன் கொலை செய்தும் வீதியோரங்களில் வீசியெறிந்து செல்வதையும் பார்க்கிறோம். இது உண்மையில் மிகவும் வேதனையானதொரு விடயமாகும். இதனை தடுக்க சரியான குடும்பத்திட்டமுறையால் மட்டுமே சாத்தியம்.
மேலும் ஒரு கர்ப்பம் மூன்று சந்தர்ப்பங்களில் நிகழலாம். சரியான குடும்பத்திட்ட முறையினை பயன்படுத்தாமை, கர்ப்பம் அடையமாட்டோம் என தம்பதியினர் கருதி உறவில் ஈடுபடுதல், இது முற்றாக பிழையான ஒரு எண்ணமாகும். இதனால் கர்ப்பம் தரிப்பதற்கு 85% வாய்ப்பாகவுள்ளது. இதனால் சரியான திட்டமிடல் என்பது முக்கியமாகும். இதற்காக வைத்தியர்களை நாடியும் ஆலோசனைகளை பெறலாம். மேலும், சில குடும்பங்களில் முறையற்ற விதத்தில் குடும்பத்திட்டத்தை கையாள்வது. உதாரணமாக 'மெட்லின்' எனப்படும் ஒருவகை மாத்திரையை அவர்கள் தினமும் பயன்படுத்த வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்கு மாத்திரை எடுக்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புண்டு. மேலும் ஆணுறைகள் பயன்பாடு, தம்பதியினர் இயற்கையான முறையை கையாளும் வழிமுறைகள் என்பவற்றால் தேவையற்ற கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால், சரியான குடும்பத்திட்ட முறையை கையாள்வது உத்தமமென்பதே எனது வேண்டுகோள்.
கேள்வி:- நவீன காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டு முறையால், ஏற்படும் நன்மை, தீமைகள் எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்:- குடும்பத்திட்ட முறைகளினால் பல்வேறு நன்மைகளும் ஒரு சில தீமைகளும் மட்டுமே உள்ளன. உண்மையில் கூறப்போனால், தீமைகளை விட நன்மைகள் அதிகமென்ற காரணத்தினால் மட்டுமே குடும்பத்திட்ட முறையினை பின்பற்றுமாறு தம்பதியினர் வலியுறுத்தப்படுகின்றனர். நன்மைகள் எதுவென நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
மேலும் மாதவிலக்கின் போது அதிக குருதிப்போக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தின் போது வைத்திய ஆலோசனையுடன் மாத்திரை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும், ஒரு சில பெண்களுக்கு அவர்களின் குடும்ப ரீதியாக சூலகக்கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புடையவர்கள், ஊசிகள், 'ஜடோல்' எனும் கைத்தோல் பகுதிகளில் வைக்கப்படும் குச்சிகளையோ பாவிப்பதனூடாக அவர்களுக்கு அதிலிருந்து முழுமையாக விடுபட வாய்ப்புகள் அதிகமென்றே கூறலாம்.
அத்தோடு சூலகக்கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் என்பன குடும்பத்திட்ட முறைகளினாலேயே ஏற்படுகின்றதென எமது சமூகத்தில் கூறுவதை நான் அதிகம் கண்ணுற்றிருக்கிறோம்.
இது முற்றிலும் தவறானதொரு சிந்தனை. இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அத்தோடு, நான் ஏற்கெனவே கூறியது போன்று நம்பகரமான குடும்பத்திட்ட முறையொன்றை கையாள்வது, தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க மிகவும் பொருத்தமான அணுகுமுறையாகும்.
- ச.லோகதர்ஷினி -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM