(ஆர்.யசி)

நான் ஆட்சிக்கு வந்தால் அதிகாரம் கொண்ட, முதுகெலும்புள்ள ஜனாதிபதியாக மக்களுக்கு சேவையாற்றுவேன். பழைய தாளத்துக்கு ஆடமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதான கூட்டமொன்று இன்று வெள்ளவாய பிரதேசத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் இதில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இளம் சமுதாயத்திருக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்பதும், பெண்கள் பொருளாதார ரீதியில் சிறப்பாக வாழக்கூடிய நிலைமைகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். 

நானும் எனது அரசாங்கமும் பலமானதும் சிறப்பானதுமான இலங்கையை கட்டியெழுப்புவோம். அதில் நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்ற வாக்குறுதியை கொடுக்கின்றேன். 

அதேபோல் தேசிய பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. எனது அரசாங்கத்தில் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றுவார். அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி என்ற ரீதியில் நானும் சகல பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார்.