எனக்கு தனியானதொரு அரசியல் கனவு இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்ற எனது முடிவில் மாற்றமில்லை

நாட்டில் அனை­வரும் சமா­தா­ன­மாக வாழும் சூழல் உரு­வாக்­கப்­பட வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னை­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி ஆட்­சியை முன்­னெ­டுக்க முடி­யாது. ஜன­நா­ய­கத்­தினை மறு­த­லித்த ஆட்­சியின் அனு­ப­வத்­தினை மக்கள் நன்கு உணர்ந்­துள்­ளார்கள்.ஆகவே மீண்டும் இந்த நாட்டில் இருண்ட யுகம் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­காது தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று முன்னாள் அமைச்­சரும் தேசிய ஒற்­று­மைக்­கான பாக்­கீர் மாக்­கார் அமைப்பின் தலை­வரும் ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பணி­க­ளுக்­கான செயற்­பாட்­ட­தி­கா­ரி­யு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, 

கேள்வி:- ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ராக இருக்கும் நீங்கள் சொற்­ப­கா­ல­மாக கட்­சியின் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்­த­மைக்­கான காரணம் என்ன? 

பதில்:- நான் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து என்­றுமே வில­கி­யி­ருக்­க­வில்லை. இருப்­பினும் கட்­சி­யி­னு­டைய நிலைப்­பா­டுகள் ரீதி­யாக சில மாறு­பட்ட நிலை­மைகள் காணப்­பட்­டி­ருந்­தன. இதன் கார­ண­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழு­வி­லி­ருந்து இரண்டு தட­வைகள் இடை­நி­றுத்­தப்­பட்டும் இருந்தேன். பிரதி தவி­சாளர் பத­வி­லி­ருந்தும் என்னை நீக்­கி­னார்கள். ஆனால், இந்த செயற்­பா­டு­களில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நான் கட்­சியை விட்டுச் செல்­ல­வில்லை. தேர்­தல்­க­ளின்­போதும், நெருக்­க­டி­யான சூழ­லிலும் கட்­சி­யு­ட­னேயே இணைந்­தி­ருந்தேன். 

ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது, இந்த நாட்டில் உள்ள மூவின மக்­களின் தலை­மை­களின் இணை­வுடன் உரு­வாக்­கப்­பட்ட கட்­சி­யாகும். கட்­சியை உரு­வாக்­கு­வ­தற்­காக டி.எஸ்.சேனா­நா­யக்க, டி.பி.ஜாயா, நடேசன், பரீட் போன்­ற­வர்கள் அளப்­ப­ரிய பணி­களை ஆற்­றி­னார்கள். கட்சி உரு­வாக்­கப்­பட்­ட­போது, டி.எஸ்.சேனா­நா­யக்க, சிங்­கள, தமிழ், முஸ்லிம் என்ற அடை­யா­ளங்கள் இருந்­தாலும் நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்று கூறினார். இந்த விடயம் என்னை வெகு­வாக பாதித்­தது. ஆகவே தான் அக்­கட்­சிக்கும் எனக்கும் கொள்­கை­ ரீ­தி­யான பிணைப்பு ஏற்­பட்­டது. கடந்த காலத்தில் நிலைப்­பாடு ரீதி­யான வேறு­பா­டுகள் ஏற்­பட்­ட­போதும் என்­மீது கட்சி சில கசப்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­போதும் நான் கட்­சி­யுடன் கோப­தா­பங்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. 

கேள்வி:- தற்­போது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாஸ அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் சார்­பி­லான பிர­சாரப் பணிகள் உள்­ளிட்ட கட்சி செயற்­பா­டு­களை எந்த அடிப்­ப­டையில் பொறுப்­பேற்­றி­ருக்­கின்­றீர்கள்? 

பதில்:- பிரித்­தா­னி­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்கை சுதந்­திரம் பெற­வேண்டும் என்ற கருத்து வெகு­வாக எழுந்­த­போது, இலங்­கையில் பல்­லி­னங்கள் காணப்­ப­டு­வதால் அவை ஒரு­போதும் ஒற்­று­மை­யாக இருக்­காது. ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்டு பிரி­வி­னைகள் அதி­க­ரிக்கும் என்று பிரித்­தா­னி­யர்கள் குறிப்­பிட்­டனர். இருப்­பினும் டி.எஸ்.சேனா­நா­யக்க போன்ற தலை­வர்கள் நாட்டின் எதிர்­கா­லத்­தினைக் கருத்­திற்­கொண்டு இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளத்­துடன் ஏனைய தலை­வர்­க­ளையும் இணைத்து சுதந்­தி­ரத்­தினைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர். டி.எஸ்.சேனா­நா­யக்க முதல் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அனைத்து தலை­வர்­க­ளி­டத்­திலும் நாட்டின் நலன்கள் மற்றும் பல்­லின சமூ­கத்­தினை அர­வ­ணைக்கும் மனப்­பாங்கு இருந்து வரு­கின்­றது. 

கட்­சி­யினுள் ஏற்­பட்ட நிலைப்­பாட்டு ரீதி­யான வேறு­பா­டு­களால் நான் சற்று வில­கி­யி­ருந்தேன். தற்­போது சஜித் பிரே­ம­தாஸ வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டதும் நான் முன்­வந்து செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்ளேன். ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது ஜன­நா­ய­கப் ­பண்­பு­களை கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள சஜித் பிரே­ம­தாஸ, சமூக ஜன­நா­யக கொள்­கை­களை மையப்­ப­டுத்­திய முற்­போக்­கான செயற்­றிட்­டத்­தினை முன்­னெ­டுக்கும் நப­ராக உள்ளார். அப்­ப­ணியை முன்­னெ­டுக்கும் ஒரு­வரை இந்த நாட்டின் எதிர்­கா­லத்­திற்­கா­கவும் அடுத்த பரம்­ப­ரை­யி­ன­ருக்­கா­கவும் வலுப்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. அதற்­கா­கவே அவரை ஆட்­சிப்­பீ­டத்தில் அமர்த்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் பணியில் இணைந்­துள்ளேன். 

கேள்வி:- இலங்கை அர­சி­யலில் பழம்­பெரும் கட்­சி­யான ஐ.தே.கவிற்கு 25வரு­டங்­க­ளாக தலை­மை­வ­கிக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை 2005இற்கு பின்­ன­ரான காலத்தில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­மொ­ழிய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­த­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இந்த விடயம் சம்­பந்­த­மான கருத்­துப் ­ப­கிர்­வினை நான் தற்­போ­தைய சூழலில் தவிர்க்­கின்றேன். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க தயா­ராகி விட்டோம். ஆகவே அந்த இலக்கு நோக்­கிய பய­ணத்­தினை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க வேண்­டிய கடப்­பாடு எமக்கு உள்­ளது. இத்­த­கைய விட­யங்கள் தொடர்­பான கருத்­துப்­ப­கிர்­வினால் எமது எதி­ர­ணி­யினர் இலா­பத்­தினை ஈட்­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யா­தல்­லவா?

கேள்வி:- ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் பிர­தான போட்­டி­யா­ளர்­க­ளாக இருக்கும்  கோத்­தா­பய ராஜ­பக் ஷ மற்றும் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோ­ரி­டையே  முற்­போக்­கான செயற்­பா­டு­களில் எத்­த­கைய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன? 

பதில்:- சஜித் பிரே­ம­தா­ஸவைப் பொறுத்­த­வ­ரையில் அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையே இலக்­காக கொண்­டுள்ளார். எமது நாடு, எமது மக்கள் என்றே அவ­ரு­டைய கருத்­தா­டல்கள் இருக்­கின்­றன. கோத்­தா­ப­யவை பொறுத்­த­வ­ரையில் புற­நி­லையில் நின்றே நாடு தொடர்பில் சிந்­திக்­கின்றார். உங்­க­ளது நாடு, நீங்கள் சிந்­தி­யுங்கள் என்றே அவ­ரது கருத்­தா­டல்கள் உள்­ளன. இவை இரண்­டுக்­கு­மான வேறு­பா­டு­களை சரி­யாக புரிந்­து­கொள்ள வேண்டும். 

தேசியக் கட்­சி­யொன்­றா­னது தேசிய ரீதி­யி­லேயே அனைத்­தி­னத்­த­வர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக செயற்­பட வேண்டும். குறித்­த­வொரு இனத்­த­வர்­களை மட்டும் மையப்­ப­டுத்­தி­ய­தாக தேசியக் கட்­சி­யொன்றால் செயற்­பட முடி­யாது. அவ்­வாறு செயற்­ப­டு­கின்ற போது உள்­ளகப் பிரச்­சி­னைகள் மென்­மேலும் வலு­வாகும். அவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­ப­டு­கின்­ற­போது நாட்டின் எதிர்­காலம் சூன்­ய­மாகும். உள்­ளக பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யான தீர்­வு­களைக் காண்­பதன் மூலம் அயல் நாடுகள் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை வெகு­வாக மேம்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். 

அடுத்து, நபர்­களின் பின்­ன­ணியும், குணாம்­சங்­களும் இங்கு முக்­கி­ய­மா­கின்­றது. சஜித்­துக்கு 25வரு­டங்­க­ளுக்கும் மேலான அர­சியல் அனு­பவம் காணப்­ப­டு­கின்­றது. கோத்­தா­ப­யவைப் பொறுத்­த­வ­ரையில் பாது­காப்புச் செய­லா­ள­ரா­கவே பணி­யாற்­றி­யுள்ளார். அப்­ப­தவி கொள்­கை­ய­ளவில் தீர்­மானம் எடுக்கும் பொறுப்­பொன்று அல்ல. மேலும் எந்­த­வொரு நப­ருக்கும் அதி­கா­ரங்­களை வழங்­கும்­போது அவரின் குணாம்­சங்­களை அறிய முடியும். பாது­காப்புச் செய­லா­ள­ராக கோத்­தா­பய இருந்­த­போது அவ­ருக்கு இருந்த சொற்ப அதி­கா­ரங்­களை எவ்­வாறு பயன்­ப­டுத்­தினார் என்­பதை நான் கூற­வேண்­டி­ய­தில்லை. அந்த யுகத்­தி­லி­ருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் இன்­னமும் மீளா­தி­ருக்­கின்­றனர். 

ராஜ­பக் ஷ தரப்­பினர், முள்­ளி­வாய்க்கால், தர்கா நகர், திகன போன்ற பிர­தே­சங்­களில் நடை­பெற்ற சம்­ப­வங்­களை இன்­னமும் கைவி­ட­வில்லை. இனக்­கு­ழுக்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விளை­கின்­றார்கள். அவற்றை தமது தேர்தல் வெற்­றிக்­கான உபா­யங்­க­ளாக பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். ஆனால் தென்­னி­லங்­கை­யிலும், வடக்­கிலும் ஆயு­தப்­பு­ரட்­சிகள் ஏற்­பட்­ட­போது, நாட்டின் தலை­மைத்­து­வத்­தினைக் கொண்­டி­ருந்த ரண­சிங்க பிரே­ம­தாஸ புரட்­சி­யேற்­ப­டுத்­திய இளைஞர் குழு­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ரா­கவே இருந்தார். தேவை­யேற்­பட்டால் கண்­களை கறுப்­புத்­து­ணியால் கட்­டிக்­கொண்டு இளைஞர் குழுக்கள் அழைக்கும் பகு­திக்கு வருகை தரவும் தயார் என்றே அறி­வித்தார். ஆகவே இவற்­றை­யெல்லாம் கவ­னத்தில் கொண்டு தூர­நோக்­குடன் மக்கள் தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். 

கேள்வி:- தேர்தல் களத்தில் போட்­டி­யி­டு­கின்ற நபர்கள் தம்மை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாட்­டுத்­த­லைவர் ஒரு­வ­ருக்­கான கடப்­பா­டு­க­ளான தேசிய பாது­காப்பை உறு­தி­செய்தல், வாழ்­வி­டங்­களை வழங்­குதல் போன்­ற­வற்­றுக்கே முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றார்­களே தவி­ர, அவற்றைத் தாண்டி நாட்டில் காணப்­படும் பிர­தான விட­யங்­களில் கொள்கை ரீதி­யான நிலைப்­பா­டு­களை பிர­தி­ப­லிப்­பதை அவ­தா­னிக்க முடி­ய­வில்­லையே? 

பதில்:- சஜித் பிரே­ம­தா­ஸவின் கொள்­கைத்­திட்­டங்­களை உள்­ள­டக்­கிய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தினை தயா­ரிக்கும் பணிகள் ஏரான் விக்­கி­ர­ம­ரட்ன தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அடுத்த வார இறு­திக்குள் அது வெளி­யி­டப்­படும். இந்த விஞ்­ஞா­ப­னத்தில் ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் அனைத்து பங்­கா­ளிக்­கட்­களின் தலை­வர்­களின் முன்­மொ­ழி­வு­களும் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே அனைத்து மக்­களின் விட­யங்­க­ளையும் கொண்­ட­தா­கவே அந்த விஞ்­ஞா­பனம் அமை­கின்­றது. 

அத்­துடன், தேசிய பிரச்­சினை, தேசிய பாது­காப்பு தொடர்பில் சஜித் பிரே­ம­தாஸ தனது நிலைப்­பா­டு­களை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ளார். குறிப்­பாக, இரா­ணுவம், ஆயு­தங்கள் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­மு­டி­யாது என்­பதில் அவர் உறு­தி­யாக இருப்­ப­தோடு பௌத்த சித்­தாந்­தத்­திற்கு அமை­வாக, பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுப்­பதை விடவும் பிரச்­சி­னை­க­ளுக்­கான கார­ணங்­களை கண்­ட­றிந்து தீர்­வ­ளிப்­பதே சிறந்­தது என்ற நிலைப்­பாட்டில் உள்ளார்.

கேள்வி:- ஐ.தே.க அறி­மு­கப்­ப­டுத்­திய திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை குறித்து பாரிய விமர்­ச­னங்கள் காணப்­ப­டு­கின்ற நிலையில் அது­ கு­றித்து சஜித் பிரே­ம­தா­ஸவின் நிலைப்­பா­டுகள் எவ்­வா­றுள்­ளன?

பதில்:- சில தினங்­க­ளுக்கு முன்­ன­தாக இலங்­கையில் உள்ள வெளி­நாட்டு உயர்ஸ்­தா­னி­கர்கள் மற்றும் தூது­வர்­க­ளுடன் சந்­திப்­பொன்றில் ஈடு­பட்டார். இதன்­போது, தனது தலை­மையின் கீழ் உரு­வாகும் அர­சாங்கம் நாட்டின் பகு­தியி­னையும், வளங்­க­ளையும் விற்­பனை செய்­யப்­போ­வ­தில்லை. அரச, தனியார் கூட்டு நிரு­வாக நிறு­வ­னங்­களில் 51 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான பங்­கினை அர­சாங்­கமே கொண்­டி­ருக்கும் என்று தெளி­வாக கூறி­யுள்ளார். இதனை  வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக மக்கள் மத்­தியில் கூற­வில்லை. சர்­வ­தேச மற்றும் அயல் பிராந்­திய பிர­தி­நி­தி­க­ளி­டத்­தி­லேயே வெளிப்­ப­டை­யாக கூறி­யுள்ளார். 

கேள்வி:- இலங்கை பூகோ­ளப்­போட்­டிக்குள் சிக்­கி­யி­ருப்­பதால் ஆட்­சி­யா­ளர்­களை தீர்­மா­னிக்கும் சக்­தி­

க­ளாக வெளி­நா­டு­களே காணப்­ப­டு­கின்­ற­தா­கவும், இவை தேர்­தல்­களின் போது பின்­ன­ணியில் நின்று செயற்­ப­டு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றதே? 

பதில்:- சஜித் பிரே­ம­தாஸ மிகவும் வெளிப்­ப­டை­யா­னவர். எந்­த­வொரு தரப்­பி­னரின் நிபந்­த­னை­க­ளுக்கோ, உடன்­ப­டிக்­கை­க­ளுக்கோ செல்­ல­மாட்டேன் என்­பதை பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ளார். மேலும் ரண­சிங்க பிரே­ம­தாஸ, இந்­திய அமை­தி­காக்கும் படை­யி­னரின் செயற்­பா­டுகள் தொடர்பில் வடக்கு மக்­களின் முறைப்­பா­டு­களை கருத்­திற்­கொண்டு அவர்­களை வெளி­யேற்­று­வ­தற்­கான தீர்­மா­னத்­தினை எடுத்தார். எந்­த­வொரு வெளி­நாட்டுச் சக்­திக்கும் கட்­டுப்­பட்டு அவர் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. இஸ்ரேல் விட­யத்­திலும் சர்­வ­தேச அரங்கில் தனது நிலைப்­பாட்­டினை பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார். அவ்­வா­றா­ன­வரின் புதல்­வரே சஜித் பிரே­ம­தாஸ ஆவார். எனவே நாட்டின் நலன்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி செயற்­ப­டு­வாரே தவிர வெளி­யாரின் தலை­யீட்­டுக்கு இட­ம­ளிக்­க­மாட்டார். 

கேள்வி:- தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக தமிழ் தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை அமு­லாக்­கு­வ­தாக சஜித்தும், கோத்­தா­ப­யவும் கூறி­னாலும் அதில் கூட தெளி­வற்ற நிலை­மை­யொன்­றல்­லவா இருக்­கின்­றது? 

பதில்:- இந்த நாட்டின் அனைத்து மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் கலந்­து­ரை­யா­டல்கள் மூல­மாக தீர்­வ­ளிப்பேன் என்று சஜித் கூறி­யுள்ளார். கோத்­தா­பய பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பொது­ஜன பெர­முன போன்று ஐ.தே.கவும் சிங்­கள, பௌத்த மக்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருந்­தி­ருந்தால் இறுக்­க­மான நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். 

ஆனால் ஐ.தே.க அவ்­வா­றா­ன­தொரு கட்­சி­யல்ல. மேலும் நாட்டின் யதார்த்த நிலை­மைகள் தொடர்பில் அவ­ருக்கு பரந்­து­பட்ட அனு­பவம் உள்­ளது. அந்த வகையில் அனைத்து சமூ­கத்­தி­ன­ரையும் உள்­ளீர்த்து கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் உரிய நட­வ­டிக்­கை­களை அவர் முன்­னெ­டுப்பார் என்ற நம்­பிக்கை அனை­வ­ருக்கும் உள்­ளது. அத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கே அவர் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ளார். ஆகவே மக்கள் நம்­பிக்­கையை ஒரு­போதும் சீர்­கு­லைக்­க­மாட்டார். இந்த அடிப்­ப­டையில் தான் சிறு­பான்மை தேசிய இனங்­களின் பிர­தி­நி­தி­க­ளான, மனோ­க­ணேசன், ஹக்கீம், ரிஷாத் போன்ற தலை­வர்கள் முன்­வந்து தமது ஆத­ர­வினை வழங்­கி­யுள்­ளார்கள். 

கேள்வி:- 2015ஆம் ஆண்டு தமிழ்­த­ரப்­புக்கள் எவ்­வி­த­மான நிபந்­த­னை­க­ளு­மின்றி ஆட்­சி­மாற்­றத்­திற்­கான பங்­க­ளிப்­பினைச் செய்­தி­ருந்­த­போதும், அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்றும், பொது­நி­பந்­த­னை­களை விதித்து எழுத்­து­மூ­ல­மான உறுதிப்பாட்டினை பெறவேண்டும் என்றும் தமிழ் தரப்பு மேற்கொள்ளும் முயற்சிகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்:- சஜித் பிரேமதாஸ வடக்கிற்கு ஒருகதையையும், தெற்கிற்கு ஒருகதையையும் கூறவில்லை. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். இன, மத வாதங்கள் விதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மிகப்பெரும் சவால் உள்ளது. இருப்பினும் அப்பணிகளை அவர் முன்னெடுப்பார். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராலேயே தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க முடியும். 

கோத்தாபயவைப் பொறுத்தவரையில் சிங்கள, பௌத்த வாக்குகளை மையப்படுத்தியே செயற்படுகின்றார். அவருடைய வெற்றிக்கு 15சதவீதம் முதல் 20சதவீதமான சிறுபான்மை வாக்குகளே தேவையாக உள்ளன. பிரச்சினைகளை, பிரிவினையை ஏற்படுத்தி அவ்வாக்குகளை பெறவே அவர் முயற்சிக்கின்றார். 

இவ்வாறான நிலையில், வாக்களிப்பினை புறக்கணிக்கும் செயற்பாடும் அல்லது நிபந்தனைகளை முன்வைக்கும் செயற்பாடும் தவறான அரசியல் நகர்வுகளாகவே இருக்கும். இத்தகைய நகர்வுகள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்தினை ஏற்படுத்தவல்லவர்களை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தி விடும். ஆகவே ஜனநாயகத்தினை நிலைநிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணும் தலைமைத்துவத்தினை உருவாக்குவதற்கான தீர்மானத்தினையே மேற்கொள்ள வேண்டும். 

கேள்வி:- எதிர்காலத்தில் உங்களின் அரசியல் பயணம் எவ்வாறு அமையப்போகின்றது?

பதில்:- எனது தந்தையார் இந்த நாட்டின் மூன்றாவது பதவிநிலையான சபாநாயகர் பதவியை வகித்தவர். நான் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியிருக்கின்றேன். ஆகவே எனக்கு தனியானதொரு அரசியல் கனவு இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற எனது முடிவில் மாற்றமில்லை. ஆனால் நாட்டினதும், இளைய சமூகத்தினதும் எதிர்காலத்திற்காக தேவையான பங்களிப்பினை வழங்குவேன்.