பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் கூட்டத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு, ஆட்டத்தை பார்ப்பதால்தான் ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்துவிடுகிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று போட்டி நடந்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர், பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் ஓடி வந்தார். 

அவர் ரோகித் சர்மாவின் காலில் விழுந்தார். அதை ஏற்காத ரோகித், ரசிகரை தடுக்கும்போது தவறி விழுந்தார். போட்டி நடக்கும்போது மைதானத்துக்குள் ரசிகர்கள் இதுபோன்று வருவது இந்தியாவில் தொடர் கதையாகி வருகிறது. 

இதுபற்றி கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், 

மைதானத்துக்குள் நுழைய முடியாதபடி தடுப்புகள் இருக்கின்றன. அதையும் மீறி ரசிகர்கள் உள்ளே வருகிறார்கள். பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் கூட்டத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு, ஆட்டத்தைப் பார்ப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது இந்தியாவில் தீராத பிரச்னையாக இருக்கிறது. 

போட்டியை இலவசமாகப் பார்ப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. ரசிகர்கள் இதுபோன்று நுழைவதைத் தடுக்கத் தான் இருக்கிறார்கள். அவர்கள், கூட்டத்தைக் கவனிக்கிறார்களா? ஆட்டத்தைப் பார்க்கிறார்களா? என்பதை அறிய, அவர்களை நோக்கியும் கமராவை திருப்ப வேண்டும். 

இது அபாயகரமான பாதுகாப்பு பிரச்னை. யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து வீரர்களுக்கு சேதத்தை உருவாக்கலாம். இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்/

இந்தியா, கிரிக்கெட், சுனில் கவாஸ்கர், sunil gavaskar