இந்திய அணி பாலோ- வன் வழங்கியதை அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியது. மயங்க் அகர்வால் 108 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 91 ஓட்டங்களையும் எடுத்தனர். அணித் தலைவர் விராட் கோலி 254 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

8 விக்கெட்டை இழந்து 162 ஓட்டங்களுடன் தடுமாறிய அந்த அணியை, 9 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டரும், கேஷவ் மகராஜூம் நிமிர்த்தினர். பொறுமையாக அடித்து ஆடிய அவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர். 72 ஓட்டங்கள் சேர்த்த கேசவ் மகராஜை, அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த ரபாடா, அஷ்வின் பந்துவீச்சில் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாபிரிக்கா, 275 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பிலாண்டர் 44 ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, நான்காம் நாளான இன்று தென்னாபிரிக்காவுக்கு பாலோவோன் வழங்கியது.

இதையடுத்து துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 16 ஓவர்கள் நிறைவில் 59 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வருகிறது. எல்கர் 37 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 5 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.