ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று சனிக்கிழமை ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

அதேபோல, ரக்பி உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறவிருந்த பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானை நெருங்கி வரும் ஹகிபிஸ் புயல் காரணமாக தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இந்த புயல் கிரேட்டர் டோக்கியோ பகுதி உள்ளிட்ட பசிபிக் கடற்கரையோர பகுதிகளை இன்று மாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரை கடக்கும்போது கடுமையான கடும் காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோசமான வானிலை நிலவுவதால் சர்வதேச விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் ஆயிரத்து 929 விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஹகிபிஸ் புயல் எச்சரிக்கையினால் ஏற்கெனவே இன்று இடம்பெறவிருந்த ரக்பி உலகக் கிண்ணத்தின் இரண்டு போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

டோக்கியோவிற்கு அருகாமையில் உள்ள யொகொஹாமா அரங்கில் இங்கிலாந்து – பிரான்ஸ் போட்டியும், மத்திய ஜப்பானின் ரொயாடா அரங்கில் நியூஸிலாந்து – இத்தாலி போட்டியும் ஏற்பாடாகியிருந்தது.

அதேபோல, சென்டாய் மற்றும் ஏனைய வடக்கு கடற்கரையோர நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் போட்டிகளும், சுஷூகா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்முலா 1 கார்ப்பந்தயமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹகிபிஸ் புயலானது 1958 ஆம் ஆண்டு ஆயிரத்து 269 பேரை காவு வாங்கிய இடா புயலைப் போன்று சக்திவாய்ந்ததாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.