(இராஜதுரை ஹஷான்)

தனி சிங்கள பௌத்த வாக்குகளை மாத்திரம் கொண்டு பொதுஜன பெரமுன  வெற்றிப் பெற முயற்சிக்கின்றது என்ற கருத்து ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரமாகும்.

 தமிழ் - முஸ்லிம்  மக்களின் ஆதரவினை பெற்றே வெற்றிப் பெறுவோம். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இவ்வாரம் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க  எதிர்பார்த்துள்ளோம். என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள்  பெற்றுக் கொண்டது என்ன? போலியான அரசியல் பிரச்சாரததிற்கு இம்முறையும் இடமளிக்க முடியாது. தேர்தலின் வெற்றிக்காகவே ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்குகின்றது எனவும் தெரிவித்தார். 

தமிழ் - முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி 2015ம் ஆண்டு கடந்த அரசாங்கம் தொடர்பில் தவறான சித்தரிப்புக்களையும், போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆட்சி மாற்றத்தின் பலனை வடக்கு உட்பட மலையக தமிழ் மக்களும், நாடுதழுவிய ரீதியில் வாழும் முஸ்லிம் மக்களும் பெற்றுக் கொள்ளவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் போலியான வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டார்கள். வடக்கு மக்களுக்க அரசியல் தீர்வு, மலையக மக்களுக்கு  நியாயமான ஒருநாள் சம்பளம் அத்துடன் அடிப்படை தேவைகள் விருத்தி  என்பவை அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளாக காணப்பட்டது. கடந்த நான்கரை வருட காலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதை தமிழ் மக்கள் மீட்டுப் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.