(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

 

எமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் நலன்களில் பிரதான பங்கினை வகிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய ரீதியிலான நகர்வுகள் குறித்து  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில். 

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த அழிவுகள் இன்றும் எமக்கு நினைவில் உள்ளது. யாழ்தேவி புகையிரத குண்டுவெடிப்பில் எனது நண்பர்கள் பலர் கொல்லப்பட்டனர். அவர்களை இழந்த துயரம் இன்றும் எனக்கு உள்ளது. அதேபோல் 1988,1989 ஆண்டுகளில் இந்த நாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் எனது பாடசாலை மாணவர்கள் பலரை நான் இழந்துள்ளேன். 

இந்த வேதனைகளுக்கு நாம் எவ்வாறு முகம்கொடுத்து வாழ்கின்றோமோ அதேபோல் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புகள் அதிகமாகும். 

எம்மை விடவும் தமிழ் மக்கள் இழந்தவையும், அனுபவித்த வேதனைகளும் அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.  மிகப்பெரிய யுத்தம் ஒன்றை உருவாக்கினர். 

ஆனால் எமது பிரதேசத்தில் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் இருந்தார். அருகாமையில் உள்ள வீடுகளில் தமிழர்கள் வாழ்ந்தனர். கிராமங்களில் தமிழ் சிங்கள திருமணங்கள் இடம்பெற்றது. ஆனால் அனாவசியமான யுத்தம் ஒன்றினை உருவாக்கி தமிழ் சிங்கள மக்கள் இடையில் அனாவசிய பிரிவினை உருவாக்கி நாட்டினை சுடுகாடாக மாற்றினர். இதனை எல்லாம் யார் விரும்பியது. யாருக்கு இந்த யுத்தம் தேவைப்பட்டது.

 இனியும் தமிழர் சிங்கள மக்கள் மத்தியில் நிரந்தரமாக ஒரு பிரிவு அவசியமா என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. 

அவ்வாறான ஒரு பிரிவுக்கு நாம் இடமளிக்க கூடாது. அனாவசியமாக தமிழர் தண்டிக்கப்படவோ நிராகரிக்கப்படவோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.