நடிகர் ஸ்ரீகாந்தும், நடன இயக்குனராக இருந்து நடிகராக உயர்ந்திருக்கும் தினேசும் ‘சம்பவம்’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாகவும், நடன இயக்குனரும், நடிகருமான தினேஷ் குழந்தையை கடத்துபவராகவும் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘சம்பவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்குகிறார்.

இதில் நடிகைகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பேபி ஸ்ருத்திகா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கிஷோர், தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அம்பரீஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌக்கார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜோன் மேக்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, இணையத்தில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தைப் பற்றி இயக்குனர் தெரிவிக்கையில்,

“ இரண்டு நாயகர்கள் சம்பந்தப்பட்ட திரில்லர் கதை. ஸ்ரீகாந்த் பொலிஸாகவும், தினேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறுகிறது.” என்றார்.

நடன இயக்குனராக இருந்து ‘ஒரு குப்பை கதை’ என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகராகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தினேஷ். அவர் நடிக்கும் ‘சம்பவம்’ படத்திற்கு தற்போதே திரை உலகில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.