“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனஞ்ஜய கம்லத் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நயோமி கெக்குலாவல ஆகியோரினால் தொகுக்கப்பட்ட இந்நூலானது மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும்.

சுமார் 160 விகாரைகள் மற்றும் கோவில்களின் தரவுகளை உள்ளடக்கியவாறு தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் நான்காவது அத்தியாயத்தில் இராவணன் தொடர்பிலான வரலாற்று ஆராய்ச்சியை இலங்கையில் ஆரம்பித்தது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய நல்லிணக்கம், சிங்கள சமூகத்தின் தோற்றத்திலிருந்து கி.பி.19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்களுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்புகளை இந்நூல் விளக்குகின்றது. 

நூலாசிரியர்களால் நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

தொல்லியல் தொடர்பிலான சிரேஷ்ட பேராசிரியர் சுதர்ஷன் செனெவிரத்ன இவ்விழாவின் தலைமை உரையை ஆற்றினார்.

வண.ஓமாரே கஸ்ஸப அநுநாயக்க தேரர், களனிப் பல்கலைக்கழத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் டி.எம்.சேமசிங்க, தொல்லியல் பட்டப்பின்படிப்பு பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான காமினி அதிகாரி, கலாநிதி ரோலன்ட் சில்வா உள்ளிட்ட புத்திஜீவிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.