(எம்.எப்.எம்.பஸீர்)

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 20  ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்தாபய  ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட  மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, எஸ். துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7  பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர்  நிரந்தர விசேட மேல் நீதிமன்றில்  வழக்குத் தொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.