இலங்கையை 8: 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்த தென்கொரியா

By Vishnu

11 Oct, 2019 | 10:08 PM
image

ஹுவாசியொங் விளையாட்டரங்கில் நேற்றிரவு மின்னொளியில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கையை 8 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் தென்கொரியா துவம்சம் செய்துள்ளது.

இதன் மூலம் தென்கொரியா கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணம், சீனா 2023 ஏ.எவ்.சி. ஆசிய கிண்ணம் ஆகியவற்றில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

35,000 ரசிகர்களின் ஆதரவுடனும் ஆரவாரங்களுடனும் களம் இறங்கிய பலம்வாய்ந்த தென் கொரியாவைக் கட்டுப்படுத்தும் நொக்குடன் ஐந்து பின்கள வீரர்கள், 4 மத்திய கள வீரர்கள், ஒரு முன்கள வீரர் என்ற முறைமையுடன் தடுத்தாடும் உத்தியை இலங்கை கையாண்டபோதிலும் எதிரணியினர் கோல் மழை பொழிவதை தடுக்க முடியாமல் போனது.

ஏறகனவே துர்க்மேனிஸ்தானை 2 க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட தென் கொரியா, அந்தக் கோல் எண்ணிக்கை போதாது என்பதை அறிந்து இலங்கைக்கு எதிரான போட்டியில் சரிமாறியாக கோல்களைப் புகுத்தியது.

கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணம், சீனா 2023 ஏ.எவ்.சி. ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான இணை தகுதிகாண் சுற்றில் எச் குழுவில் இடம்பெறும் இலங்கை அடைந்த மூன்றாவது நேரடி தோல்வி இதுவாகும்.

துர்க்மேனிஸ்தானிடம் 2 க்கு 0 எனவும் வட கொரியாவிடம் 1 க்கு 0 எனவும் தனது சொந்த மண்ணில் தோல்விகளைத் தழுவிய இலஙகை, இன்னும் நான்கு தினங்களில் குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறவுள்ள போட்டியில் லெபனானை எதிர்த்தாடவுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆட்;டம் ஆரம்பித்து 10ஆவது நிமிடத்தில் ஹொங் சுல்லிடமிருந்து பெற்ற பந்தை லீ கங் இன் பரிமாற அணித் தலைவர் ஹியங் மின் சொன் கோலாக்கினார்.

ஏழு நிமிடங்கள் கழித்து சுஜான் பேரேராவின் 'கோல் கிக்'கை மத்திய கள வீரர் ஒருவர் தலையால் முட்டி முன்னே நகர்த்த அதனை நோக்கி விரைவாக ஓடிய டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் கழகத்துக்காக விளையாடும் சொன், மிக லாவகமாக பந்தை கட்டுப்படுத்தி அதனை பரிமாற தென் கொரியரின் இரண்டாவது கோலை ஷின் வூக் கிம் போட்டார்.

இருபதாவது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு கிடைத்த கோர்ணர் கிக் உதையை லீ எடுக்க, உயர்வாக வந்த பந்தை நோக்கித் தாவிய ஹீ சான் ஹுவாங் தலையால் முட்டி கோலாக்கினார். தென் கொரிய வீரர்களின் உயரத்துக்கு மத்தியில் குள்ளமான இலங்கை வீரர்களால் அதனைத் தடுக்க முடியாமல் பொனது.

மேலும் 10 நிமிடங்கள் கழித்து படுவேமாக பந்துபரிமாற்றத்தில் ஈடுப்பட்ட தென் கொரிய வீரர்கள், இலங்கை வீரர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் கிம் மூன் ஹுவான் தாழ்வாக பரிமாறிய பந்தின்மூலம் ஷின் வூக் கோல் நிலையை நான்காக உயர்த்தினார்.

ஆட்டத்தின் முதலாவது பகுதியின் உபாதையீடு நேரத்தில் இலங்கை பின்கள வீரர் சலன சமீர பந்தை கையால் தட்டிய குற்றத்துக்காக மத்தியஸ்தரினால் தென் கொரியாவுக்கு பெனல்டி ஒன்று வழங்கப்பட்டது. அந்த பெனல்டியை அணித் தலைவர் சொன் மிக நேர்த்தியாக கோலினுள் புகுத்த டேகுக் வொரியர்ஸ் என அழைக்கப்படும் தென் கொரியா இடைவேளையின்போது 5 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னர் 54 ஆவது நமிடத்தில் தொடர்ச்சியான பந்து பரிமாற்றங்களின் மூலம் ஷின் வூக் தனது மூன்றாவது கோலைப் போட்டார். அத்துடன் நின்று விடாமல் மேலும் பத்து நிமிடங்கள் கழித்து உயரே தாவி தலையால் முட்டிய ஷின் வூக் தனது தனிப்பட்ட கோல் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார்.

அணித் தலைவர் சொன்னுக்கு பதிலாக 62ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் நுழைந்த குவொன் சங் ஹ10ன் 77ஆவது நிமிடத்தில் ஹுவாங் பரிமாறிய பந்தை கோலாக்க தென் கொரியா 8 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது பரமவைரியான வட கொரியாவை அந்நிய மண்ணில் (பியொங்யெங்) தென் கொரியா சந்திக்கவுள்ளது. அதே தினம் குதிரைப் பந்தயத் திடலில் லெபனானை இலங்கை வரவேற்கவுள்ளது. 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right