சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை விலக்கிக்கொள்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானம் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரில் முன்னரங்கத்தில் நின்ற குர்திஷ் படைகளுக்கு துரோகம் இழைத்ததற்கு ஒப்பானதாகும். படைகளை விலக்கும் தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்த சில நாட்களில் குர்திஷ் இனத்தவர்கள் பெரும்பான்மையினராக வாழும் வடகிழக்கு சிரியாவுக்குள் கடந்த புதன்கிழமை துருக்கி அதன் இராணுவ ஊடுருவலை நடத்தியது. இது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றேயாகும்.
சிரியாவின் குர்திஷ் பிராந்தியமான ரோஜாவா தற்போது ஓரளவு சுயாட்சி கொண்ட குர்திஷ் அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படுகிறது ; அதன் திரட்டல் படையான மக்கள் பாததுகாப்பு பிரிவுகளே எல்லைகளை காவல் செய்கின்றன. இஸ்லாமிய அரசு இயக்கத்தின் இராச்சியத்தை ( கலிபேற் ) நிர்மூலஞ்செய்த அமெரிக்க ஆதரவுடனான சிரிய ஜனநாயக படைகளில் முக்கியமான அங்கமாக மக்கள் பாதுகாப்பு படைகள் விளங்கின. தனது குர்திஷ் பிராந்தியங்களில் குர்திஷ் தொழிலாளர் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற வன்முறைக் கிளர்ச்சியை அடக்க சண்டையிட்டுக்கொண்டிருக்கும் துருக்கி பலமடைந்திருக்கும் மக்கள் பாதுகாப்பு படையையும் எல்லைக்கு அப்பால் இருக்கும் ஒரு குர்திஷ் சுயாட்சி அரசாங்கத்தையும் அதிகரித்துவரும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது.
ரோஜாவா பிராந்தியத்துக்கும் எல்லைக்கும் இடையில் துருக்கியின் ஆதரவுடனான சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தாக்குதல் தடுப்பு வலயம் ஒன்றை உருவாக்குவதே துருக்கிய ஜனாதிபதி றிசெப் தஜிப் எர்டோகானின் திட்டமாக இருக்கிறது.அந்த வலயத்தில் ஓரளவு எண்ணிக்கையான சிரிய அகதிகளை குடியமர்த்தவும் அவர் திட்டமிடுகிறார். முன்னைய ஊடுருவலின்போது துருக்கி எல்லை நகரான அவ்ரினில் இருந்து மக்கள் பாதுகாப்பு படைகளை விரட்டிவிட்டது. அவ்ரினில் செய்ததை எல்லைப்பிராந்தியத்தில் நீண்டதும் அகலமானதுமான ஒரு பரப்பில் மீண்டும் செய்வதற்கே துருக்கி இப்போது திட்டமிடுகின்றது. அமெரிக்கத் துருப்புகள் இதுவரை காலமும் அங்கு நிலைகொண்டிருந்தமையால் எர்டோகான் ஊடுருவலைச் செய்யமுடியாமல் இருந்திருக்கலாம்.ஆனால், துருக்கியின் தற்போதைய நடவடிக்கையில் அமெரிக்கத்துருப்புகள் சம்பந்தப்படவோ அல்லது அதை ஆதரிக்கவோ போவதில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்திருக்கும் நிலையில் துருக்கி அரசாங்கம் அதன் எண்ணப்படி செயற்படுவதற்கு வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா துருப்புகளை விலக்கிக்கொள்வது ஒரு பிரச்சினை அல்ல.மேற்காசியாவில் அமெரிக்க இராணுவ ஈடுபாடுகளைை முடிவுக்கு கொண்டுவருவதாக தேர்தல் பிரசாரங்களின்போது ட்ரம்ப் வாக்குறுதி அளித்தருந்தார்.சிரிய நெருக்கடியில் என்றென்றைக்கும் அமெரிக்கா சிக்குப்பட்டு கிடக்கவும் முடியாது. ஆனால், திடுதிப்பென தனது படை நடவடிக்கைகளை நிறுத்துகின்ற விதமும் அதனால் நேரக்கூடிய விளைவுகளுமே பிரச்சினையாகும்.
இஸ்லாமிய அரசைத் தோற்கடிப்பதில் குர்திஷ்கள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகித்தார்கள்.2015 முற்பகுதியில் மக்கள் பாதுகாப்பு படையினால் விடுவிக்கப்பட்ட குர்திஷ் நகரான கோபேனில் இருந்துதான் இஸ்லாமிய அரசின் வீழ்ச்சி ஆரம்பித்தது.வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் அரசாங்கம் ஒன்று இன்று இருக்கிறதென்றால் இஸ்லாமிய அரசின் தலைநகரம் போன்று விளங்கிய ரக்கா உட்பட பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நகரங்கள் சகலதையும் அமெரிக்காவின் ஆதரவுடன் மக்கள்பாதுகாப்பு படைகள் கைப்பற்றியதே அதற்கு காரணமாகும்.ஆனால், இப்போது இஸ்லாமிய அரசின் இராச்சியம் நிர்மூலம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், குல்திஷ்களை அமெரிக்கா கைவிடுகின்றது போலத் தோன்றுகிறது.
குர்திஷ்களின் பாதுகாப்புக்கு துருக்கியிடமிருந்து உத்தரவாதங்களைப் பெற்றுக்கொண்டு சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை ஒரு ஒழுங்கமைவான முறையில் டொனால்ட் ட்ரம்ப் விலக்கிக்கொண்டிருக்க முடியும். அதற்கு பதிலாக அவர் துருக்கியின் கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுத்திருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.
இரண்டாவதாக, இஸ்லாமிய அரசின் இராச்சியம்தான் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது.இஸ்லாமிய அரசு இயக்கம் ஒழிக்கப்படவில்லை.எஞ்சியிருக்கும் இஸ்லாமிய அரசு போராளிகள் ஈராக்கினதும் சிரியாவினதும் பாலைவனங்களுக்கு பின்வாங்கியிருக்கிறார்கள் ; திரும்பவும் தாக்குதல்களை நடத்துவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள்.சிரியாவுக்குள் துருக்கியின் ஊடுருவல் ரோஜாவாவில் குர்திஷ்கள் அடைந்த முன்னேற்றங்களுக்கு ஒரு பின்னடைவாக மாத்திரமல்ல, களத்தில் இருக்கின்ற மிகுந்த ஆற்றல்கொண்ட ஜிஹாதி எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியம் முழுவதையும் குழப்பநிலைக்குள் தள்ளிவிடுவதாகவும் இருக்கும் ; அனர்த்தம் நேருவதற்கே வாய்ப்பு.
( த இந்து )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM