தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த புஜாரா 58 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டையும் ரபாடா எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது.  விராத் கோலி 63 ஓட்டங்களுடனும் ரஹானே 18 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே அரை சதம் கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விராத் கோலி, சதம் அடித்தார். இது இவருக்கு 26 வது டெஸ்ட் சதம். இந்த ஆண்டில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமும் இதுதான்.

இன்றைய மதிய நேர உணவு இடைவெளி வரை இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களை குவித்திருந்தது. கோலி 104 ஓட்டத்துடனும், ரஹானே 58 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.