(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

நாட்டில் கடந்த சில தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 7ஆம் திகதிக்கு சபை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் கட்சித் தலைவர் கூட்டத்தினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக சபை ஒத்திவைப்பு வேளைக்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவணி எம்.பியான தினேஷ் குணவர்த்தன சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்தி விவாதிக்கவேண்டுமென கோரினார். 

இதன்போது அனர்த்த  முகாமைத்து அமைச்சரின் முழுமையான அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பாக கலந்துரையாடலாம். அதற்கு முன்னதாக விவாதம் அவசியமில்லையெனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீங்கள் தேங்காய் உடைத்ததன் விளைவால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

எனினும் அதன்பின்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு விசேட அமர்வொன்றில் விவாதிப்பதென முடிவு எட்டப்பட்டுள்ளது.