(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டதன் மூலம் கோத்தாபய ராஜபக்ஷ்வின் வெற்றி உறுதியாகிவிட்டது. பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற வைப்பதற்கே தற்போது முயற்சிக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் பின் கதவினாலே ஆட்சிக்கு வந்திருக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்தார்.

பத்தரமுள்ளையில் அமைந்துள்ள எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்படவேண்டும் என்றே நாங்கள் ஆரம்பித்தில் இருந்து தெரிவித்து வந்தோம். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போது கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததோ அப்போதே கோத்தாவின் வெற்றி உறுதியாகிவிட்டது. கோத்தாபய ராஜபக்ஷ்வை பாரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும். அதற்காகவே நாங்கள் தற்போது முயற்சிக்கின்றோம்.  

எனவே ஐக்கிய தேசிய கட்சி முடியுமானால் சதித்திட்டங்கள் மேற்கொள்ளாமல் நேரடியான மோதலுக்கு முன்வரவேண்டும். மக்களின் ஆதரவு யாருக்கு இருப்பதென்பதனை தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.