அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இலங்கையில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக உயிரிழந்த, பொருட்கள் சேதமடைந்த மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உணவு, உடை, சுகாதாரம் மற்றும் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், துரித நிவாரணம் வழங்குவதற்கும், தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அனர்த்த சூழ்நிலைக்கு அச்சமின்றி முகம்கொடுத்து நிவாரணப் பணிகளிலும், வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த அனர்த்தங்களுக்கு ஆளானவர்களுக்கு உதவியளிப்பதற்காக முன்வந்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுடன், தற்போதைய சூழ்நிலையில் அவர்களது உதவிகளை தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

இத்துயர்மிக்க சந்தர்ப்பத்தில் எனது பணிவான வேண்டுகோள் யாதெனில், எமது நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையிலிருந்து மீண்டு, நாட்டு மக்களிடையே சுபீட்சத்தினை ஏற்படுத்துவதற்காக அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடன் எதிர்பார்ப்புடனும் அணிதிரளவேண்டும் என்பதாகும் என்றுள்ளது.