இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு பியூட்டி என்ற மனைவியும் அங்கன் என்ற மகனும் உள்ளனர்.  மேலும் மனைவி, பியூட்டி தற்போது கர்ப்பமாக இருந்தார்.

இவர்கள் மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அவர்களின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்கள். ஆசிரியர் குடும்பத்தை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கோர சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில் போந்து கோபால் வீட்டின் அருகே விஜயதசமி பூஜைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும் அந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் அவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள் கோபாலின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்கள். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, கோபால், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்த வண்ணம் கிடந்துள்ளனர்.

மேலும், தம்பதிகள் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்கள் மகன் அங்கன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.