(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கைசாத்திடப்பட்டது.

சுதந்திர கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகரவும், பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த்தில் முற்பகல் 10.45 மணியளவில் கைசாத்திட்டனர்.

சர்வ மத வழிபாடுகளுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானதுடன், சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாராநாயக்க மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்கள் ஆகியோர் நினைவு கூறப்பட்டனர். தொடர்ந்து இரு கட்சிகளினதும் கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் இரு கட்சி செயலாளர்களுடன் , சு.க சார்பில் அதன் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா , பொருளாலர் லசந்த அழகியவண்ண, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸநாயக்க, பிரசார செயலாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பதில் தவிசாளர் பேராசிரியர் றோஹண லக்ஷ்மன் பியதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, ஷாந்த பண்டார, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.