(இராஜதுரை ஹஷான்)

தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவே வெற்றியினை தீர்மானிக்கும். தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் போலியான வாக்குறுதிகளை முன்வைக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி  உத்தியோகப்பூர்வமா   இணைந்துள்ளமை ஐக்கிய தேசிய கட்சிக்கு  பாரிய சவாலாக அமையும். நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  கட்சிகளும்  எத்திரணியுடன் இணைந்துக் கொள்வார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து   சுதந்திர கட்சி  முன்னெடுத்த தவறான அரசியல் தீர்மானங்கள் தற்போது திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது.  சுதந்திர கட்சியின் ஆதரவுடனே  2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

மக்களாணையினை பெற முடியாது என்ற காரணத்தினாலே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கொண்டு அவர் தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கைக்கு முரணாகவே  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உருவாக்கப்பட்டது. அவ்வாறான நிலையில் இரு தரப்பினரும் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது என்பது கடந்த வருடத்தில் இறுதிப் பகுதியில் தெளிவுப்படுத்தப்பட்டது. தேசிய அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியமை சிறந்த அரசியல் தீர்மானமாகும்.

நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  பல அரசியல் கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன்  இணைந்துக் கொள்வார்கள். தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவே வெற்றியினை தீர்மானிக்கும். தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் போலியான வாக்குறுதிகளை முன்வைக்க மாட்டோம் என்றார்.