அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், திருடர்கள் சிலர் மலைப்பாம்பு வைக்கப்பட்டிருந்த பையை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் பிரைன் கண்டி. பாம்பு பிரியரான இவர், அவற்றை இனப்பெருக்கம் செய்து விற்று வருகிறார்.

கடந்த சனிக்கிழமை சான் ஜோஸில் உள்ள மார்டின் லூதர் கிங் நூலகத்தில் பாம்புகள் பற்றி விளக்கம் அளித்துவிட்டு தனது காருக்குத் திரும்பினார். 

கதவைத் திறந்து பார்த்தால், உள்ளே இருந்த பையை காணவில்லை. அதன் உள்ளே 4 மலைப்பாம்புகள் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பொலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

அத்தோடு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அதில் தனது பாம்பை யாரோ திருடி விட்டு சென்றுவிட்டார்கள். அதைப் பார்த்தால், தனக்கு தகவல் தெரிவித்து உதவும்படி கேட்டிருக்கிறார் பிரைன்.

அந்த பாம்புகளுக்கு வைத்த பெயர், நிறம் ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். பொலிசார் சிசிரிவி கேமரா காட்சிகளை வைத்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.