இந்தோனேசியாவின் உயர் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ ஐஎஸ் ஆதரவாளர்கள் என கருதப்படுபவர்களால் கத்திக்குத்திக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜாவாவின்  பன்டெக்லாங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயர் பாதுகாப்பு அமைச்சர்  விரான்டோ அவரது வாகனத்திற்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையும் அமைச்சர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் சந்தேகநபர் ஒருவருடன் மல்லுக்கட்டுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

அமைச்சருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது, காவல்துறை உத்தியோகத்தர் , இராணுவவீரர் உட்பட வேறு சிலரும் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தம்பதியினரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து ஆயுதங்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் பல்கலைகழகமொன்றை திறந்துவைப்பதற்காக சென்ற அமைச்சர் அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கி உரையாடிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர்மீதே காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவருடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணை செய்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.