(நா.தனுஜா)

ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நோக்கிய போராட்டங்களில் சந்தர்ப்பவாதம் என்பது தவிர்க்க முடியாததொன்றாகும் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித் சேனாரத்ன, பெரும்பாலான போராட்டங்களின் இறுதிக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை முன்நிறுத்தி காட்டிக்கொடுப்புக்கள் இடம்பெறுகின்றன என்றும்  குறிப்பிட்டார்.

சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருப்பதுடன், அவர் தலைமையிலான அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவையும், எம்மையும் முன்நோக்கி வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றவர்கள் சிவில் சமூகத்தினரும், தொழிற்சங்கத்தினருமே ஆவர். அந்த சிவில் சமூக அமைப்புக்களை வழிநடத்திய வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரரும் இன்று இல்லை. மைத்திரிபால சிறிசேனவும் இன்றில்லை.

சோபித தேரர் அவராக விரும்பி எம்மிடமிருந்து விலகிப்போகவில்லை. ஆனால் மைத்திரிபால சிறிசேன அவராகவே விலகிச்சென்று விட்டார்.

எனினும் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நோக்கிய இத்தகைய போராட்டங்களில் சந்தர்ப்பவாதம் என்பது தவிர்க்க முடியாததொன்றாகும். பெரும்பாலான போராட்டங்களின் இறுதிக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை முன்நிறுத்தி காட்டிக்கொடுப்புக்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.