குறிப்பு:- பேராசிரியர் அஹியோ முன்வைத்த முக்கிய விடயங்கள்

(ஆர்.ராம்)

பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிலையம், இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அனுசரணையுடன் நடப்பாண்டிற்கான ஆபிரிக்க-ஆசிய நூற்றாண்டு தொடரின் இரண்டாவது கருத்தாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஜுப்லி கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹரின்ந்த விதானகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அஹிரா சுஹியமா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இக்கருத்தாடல் நிகழ்வில் பிரதான உரையினை, பொதுமக்கள் கொள்கை பற்றிய பட்டதாரி பாடசலையின் துணைவேந்தரும், டோக்கியோ பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் அரசியல்துறை பேராசிரியர் அஹியோ டக்ஹர ‘ஜப்பான் - சீன உறவுகளின் சகாப்தமும் அமெரிக்க- சீன போட்டியும்’ எனும் தலைப்பில் பிரதான கருத்துரையை ஆற்றியிருந்தார். அவருடைய உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு, 

சமகால நிலைமை

தற்போதைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பலவீனமடைந்து செல்வதற்கு காரணம், ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து செல்வதனாலேயே ஆகும். ஏன் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதை நாம் ஆழமாக அவதானிக்கும் அதேநேரம், இதனை மிகவும் பக்குவமாக கையாள வேண்டியுமுள்ளது. 

சீனா தொடர்பில் பல நாடுகள் குழப்பமான நிலைப்பாடுகளையே கொண்டிருக்கின்றன. இலங்கை இந்த விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், சீனா நிலையான அபிவிருத்தியை நோக்கி தனது பொருளாதார முன்னெடுப்புக்களைச் செய்கின்றது. அந்த நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றது. 

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான எத்தகைய நிலைமைகள் இருந்தாலும் பொருளாதாரரீதியான கூட்டாண்மை பல்வேறு ஆண்டுகளாக சிறப்பான நிலையிலேயே உள்ளது. சீனாவின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் அந்நாடு மட்டும் நன்மைகளை பெறவில்லை. இலங்லை,ஜப்பான் போன்ற நாடுகளும் ஒருங்கே நன்மைகளை பெறுகின்றன. 

இந்தப்பின்னணியில் பார்கின்றபோது சீனாவை மென்போக்கின் அடிப்படையிலேயே கையாள வேண்டியுள்ளது. இந்த மென்போக்கானது, பொருளாதாரத்துறையில் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. 

எனது நண்பர்கள் பலர் சீனாவில் இருக்கின்றார்கள். அவர்களுடன் உரையாடுகின்றபோது, ஒருகட்சியின் ஆட்சியும், திறந்த பொருளாதார போக்கின் காரணமாகவும் பல்வேறுபட்ட வேறுபாடுகளும், இடைவெளிகளும் ஏற்படுகின்றன என்ற புரிதலுக்கு வரமுடிகின்றது. 

இந்த அடிப்படையில் பார்கின்றபோது சீனாவை எவ்வாறு மாற்றுவது என்ற விடயம் மேலெழுகின்றது. முதலில் அந்த நாட்டின் பிரஜைகள் இதனை உணர்ந்துள்ளார்களா? அதுபற்றிச் சிந்திக்கின்றார்களா என்ற கேள்விகள் இருக்கின்றன. எவ்வாறாயினும் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகரும் எம்போன்ற நாடுகள் சீனாவுடனான உறவுகளில் மென்போக்கினை கடைப்பிடிப்பதே உகந்த நடவடிக்கையாக இருக்கும். 

மேலும் தேசியபாதுப்பின் பேரில் சீனாவின் படைகுவிப்புக்களை மேற்கொள்கின்றது. அந்நாட்டுடன் பொருளாதார ரீதியாக இணைந்து பயணிக்கின்றபோது அதன் “பிடி” அதிகரித்து விடும் என்ற அச்சமும், அவ்வாறு இணைய மறுதலிக்கின்றபோது படைகளின் மூலம் அந்நாடு தனது பிரதிபலிப்புக்களைச் வெளிப்படுத்துமோ என்ற அச்சமும் இல்லாமலில்லை. இந்த விடயங்களில் எவ்வாறான அனுகுமுறைகளை மேற்கொள்வது என்பதே இங்கு முக்கிய விடயமாகின்றது. 

மேம்பட்டுவருகின்ற யப்பான்-சீன உறவு

2012ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதியில் கிழக்க சீனக்கடலில் சீன படகுகளின் பிரசன்னத்தால் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டிருந்ததோடு, பிராந்தியத்தில் பதற்றமான நிலைமைகளும் தோற்றம்பெற்றிருந்தன. வரலாறு, பாரம்பரியம், தேசியபாதுகாப்பு, தீவுகளுக்கான உரிமம் என பல சார்ச்சைகள் இருநாடுகளுக்குமிடையில் அதிகரித்தே வந்திருந்தன. 

அவற்றுக்கெல்லாம் அப்பால் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவேமாக வலுவடைந்து வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தானின் புத்திஜீவிகள் உட்பட சர்வதேச தரப்பினரே ஜப்பானும், சீனாவும் பரம எதிரிகள் என்ற நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார்கள். உலகத்தினை சிறிதாக கொள்ள முடியாது. சர்வதேச உறவுகள் பற்றிய புரிதல்கள் மிகவும் அவசியமாகின்றது. 

‘இருதரப்பு உறவு’ என்று பார்க்கின்றபோது வரைவிலக்கணமொன்றை இலகுவாக வழங்கிவிடமுடியாது. காரணம், தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல், இராஜதந்திரம், கலாசாரம் என அதில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த பின்னணியில் சீனா,ஜப்பான் இருதரப்பு உறவினையும் இலகுவாக வரையறுத்துவிட முடியாது. அந்த வகையில் 1972ஆம் ஆண்டுக்குப்பின்னரான ஆய்வுகளின் பிரகாரம் சீன, யப்பான் உறவுகள் மேம்படுவதற்கு முக்கிய நான்கு விடயங்கள் காணப்படுகின்றன. 

முதலாவதாக உள்நாட்டு அரசியல் காணப்படுகின்றது. சீனா ஜனாதிபதி  ஜின் பிங் வலுவான அதிகாரங்களைக் கொண்ட அரசியல் தலைவராக காணப்படுகின்றார். அங்கு தேசியவாதமும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. இவ்வாறான வலுவான அதிகாரத்தினைக் ஒரு தலைமைத்துவத்தினாலேயே யப்பானிடத்தில் நட்புக்கரம் நீட்ட முடியும். இதனால் அவருக்கு உள்நாட்டில் எவ்விதமான பிரச்சினையும் எழப்போவதில்லை. 

அதேநேரம் ஜப்பான் தரப்பில் பார்க்கின்றபோது 90சதவீதமானவர்கள் சீனாவுடனான உறவுகளை உணர்வு ரீதியாக பார்கின்றார்கள். அத்துடன் 70சதவீதமானவர்கள் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு வெளிப்படையாகவே அதியுச்ச முக்கியத்துவம் அளிக்கின்றார்கள். காரணம், சீனாவுடன் முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டால், தேசிய பாதுகாப்பு, பொருளாதார இலாபங்கள் சிதைக்கப்படும் என்று கருதுகின்றார்கள். 

ஆகவே ஜப்பானின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டே அவ்வாறு சிந்திக்கின்றார்கள். இந்த விடயத்தில் அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் சிறந்த புரிதலைக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இருநாடுகளும் உள்நாட்டு அரசியலை முன்னிலைப்படுத்துவதில் அதீத அக்கறை கொண்டிருக்கின்றன.  

இரண்டாவது விடயமாக இருதரப்பு பொருளாதார நலன்கள் காணப்படுகின்றன. சீனாவும், ஜப்பானும் சர்வதேச பொருளாதாரத்தின் பங்காளர்களாக இருப்பதால் இருதரப்பினருக்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கு அடிதளமேற்படுகின்றது. நாம் சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பீஜிங், ஷங்காய் போன்ற நகரங்களைப் பற்றியே அதிகமாக பேசுகின்றோம். 

ஆனால் சீனாவின் ஏனைய நகரங்களில் பொருளதார மந்த நிலைமைகள் இல்லாமல்லை. வேலைவாய்ப்பக்களைத் தேடி அங்கிருக்கும் இளைய சமுகத்தினர் நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலைமைகளும் உள்ளன. இதனால் சீனாவின் பகுதிகளில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்த பின்னணியில் தான் சீனாவில் யப்பானின் முதலீடுகளுக்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. ஆகவே இருநாடுகளும் இருதரப்பு பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. 

மூன்றாவதாக இருநாடுகளுக்கும் உள்ள சர்வதேச உறவுகள் காணப்படுகின்றது. எப்பொழுதெல்லாம் வொஷிங்டனுடன் முரண்பாடகள் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் டோக்கியோ பக்கமாக திரும்புவதே சீனாவினுடைய பாரம்பரிய இராஜதந்திரமாக இருந்துவருகின்றது. தற்போதும் கூட அதேநிலைமைகள் இல்லாமலில்லை. 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சீனா மிக நெருக்கமாக இருந்தது. காரணம், வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் விரிசல் நிலையிலேயே இருந்தன. ஆனால் வடகொரியாவுடன் அமெரிக்கவின் அனுகுமுறையில் மாற்றம் ஏற்படவும் சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையிலான உறவுகள் மோசமான நிலையை அடைந்துவிட்டன. தற்போதும் அது நீடிக்கின்றது. 

தொடரும்….