(நா.தனுஜா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரானவர்கள் என்றாலும்கூட, அவ்வாறானதொரு மக்கள் அபிமானமுடைய கட்சி நாட்டில் இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். நாட்டிற்கும், மக்களுக்கும் சிறந்த சேவையாற்றிய தலைவர்களை அந்தக்கட்சி உருவாக்கியிருக்கிறது. எனவே சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கினாலும் உண்மையில் சுதந்திரக் கட்சியை நேசிப்பவர்கள் அதனை விரும்பமாட்டார்கள். ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போதுள்ள மோசமான நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் பொதுஜன பெரமுனவினரே என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் என்று அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த காலத்தில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவ்வாறானவர்களை தம்மோடு இணைத்துக்கொண்டு, தற்போது முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் போன்றும், இனங்களுக்கு இடையில் சமத்துவத்தை விரும்புபவர் போன்றும் எதிரணி வேட்பாளர் தன்னைக் காண்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றார். ஆனால் அண்மையில் அவருடைய வழக்கில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வைத்தியர் ஷாபி விவகாரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதொன்று என்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மை இவ்வாறிருக்க, எதிர்வரும் 30 நாட்களுக்கு மாத்திரம் அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் போன்றும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துபவர்கள் போன்றும் நடிக்கத்தேவையில்லை. எனவே யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்காதவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.