ஜனா­தி­பதித் தேர்­தலின்போது தாம் வாக்­க­ளித்த வேட்­பாளர் வெற்றி பெற்­றாலும் சிறு­பான்­மை­யினர் எவ்­வித நன்­மை­க­ளையும் அடையப் போவ­தில்லை. தோற்­று­விட்டால் நிலைமை இன்னும் மோச­மா­கி­விடும் என்று முன்னாள் அமைச்சர் பஷீர் ஷேகு­தாவுத் தெரி­வித்தார்.

இதுகுறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

நான் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான கட்­டுப்­ப­ணத்தைச் செலுத்­தி­யது பற்­றிய செய்தி ஊட­கங்­களில்  வெளி­வந்­தி­ருந்­தது. நிய­ம­னப்­பத்­திரம் தாக்கல் செய்­ய­வில்லை என்­பது பற்­றியும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. எனவே ஏன் கட்­டுப்­பணம் செலுத்­தினேன்? ஏன் நிய­ம­னப்­பத்­திரம் தாக்கல் செய்­ய­வில்லை என்­பன பற்றி தெளி­வு­ப­டுத்­த­வேண்­டி­யுள்­ளது.

நான் கட்­டுப்­பணம் செலுத்­திய வேளை வேறெந்த சிறு­பான்மை அர­சி­யல்­வா­தி­களும் பணம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை. பின்னர் பலர் தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டியில் இறங்­கு­வ­தற்கு முனைந்­தனர். நான் பணம் கட்­டு­வ­தற்கு முன்­னரே தமிழ்­பேசும் பொது வேட்­பாளர் ஒருவர் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­ வேண்டும் என்ற கருத்தை ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். ஆயினும் இந்தக் கருத்து மக்­க­ளையும் குறித்த சிறு­பான்மைத் தலை­வர்­க­ளையும் சென்­ற­டை­வ­தற்­கான கால அவ­காசம் இருக்­க­வில்லை.  தமிழ், முஸ்லிம் கட்­சி­களும் சிறு­பான்மை சமூக முக்­கி­யஸ்­தர்­களும் கூடிப் பேசி பொது முடி­வொன்­றுக்கு வராமல் தமிழ் பேசும் பொது வேட்­பாளர் ஒருவர் போட்­டி­ யி­டு­வது சாத்­தி­ய­மில்லை என்­பதை நான் முன்­னரே உணர்ந்­தி­ருந்­தாலும் இப்­ப­டி­யான ஒரு பொது வேட்­பாளர் பற்­றிய கருது கோள் இத்­தேர்தல் காலத்தில் முன்­வைக்­கப்­பட்டு தமிழ் பேசும் அர­சியல் அரங்கில் அறி­யப்­ப­டு­வது எதிர்­கா­லத்தில் இத்­த­கைய வேட்­பாளர் ஒருவர் கள­மி­றங்­கு­வ­தற்­கான சாத­கத்தை ஏற்­ப­டுத்­தலாம் என்ற நம்­பிக்கை எனக்­கி­ருந்­தது.

இக்­க­ருத்து சிறி­த­ள­வா­வது மக்­களைச் சென்­ற­டைய கட்­டுப்­பணம் செலுத்தும் செயல் செய்­யக்­கூடும் என்­ப­த­னால்தான் அத னைச் செய்தேன்.

கட்­டுப்­பணம் செலுத்தும் போதே வேட்­பு ­மனு தாக்கல் செய்­வ­தில்லை என்ற முன் முடி­வோ­டுதான் இருந்தேன்.

2005ஆம் ஆண்டு வடக்குத் தமிழ் மக்கள் தேர்­தலில் வாக்­க­ளிக்­காமல் விட்­ட­மைதான் அவ்­வாண்டு மஹிந்த ராஜ­பக் ­ஷவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது. 2010ஆம் ஆண்டும் தமிழ் மக்கள் அளித்த வாக்கு வீதம் மிகக் குறை­வாக இருந்­த­மையும், முஸ்லிம் மக்கள் மஹிந்­த­வுக்கு 2005ஆம் வருடத் தேர்­தலில் வழங்­கிய வாக்­கு­களை விட 2010இல் அளித்த வாக்­கு­களில் கணி­ச­மான அதி­க­ரிப்பு காணப்­பட்­ட­மையும் அவரை இரண்­டா­வது முறையும் ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது.

2015ஆம் ஆண்டில் நடை­பெற்ற தேர்­தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஏகோ­பித்து வழங்­கிய மில்­லியன் கணக்­கான வாக்­குகள் இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கதி­ரையில் அமர்த்­தி­ன.

ஆனால் 2005இல் தமிழர் எடுத்த முடிவு தமி­ழரின் ஆயுதப் போராட்ட அர­சி­யலை முடித்து வைத்­தது. முஸ்­லிம்­களும் அடைந்­தது என்று குறித்­து­ரைக்க எது­வு­மில்லை. 2010 தேர்­தலின் பின்­ன­ரான ஐந்து வருட காலத்துள் தமிழ்­ பேசும் மக்கள் எத­னையும் அடை­ய­வில்லை. 2015 தேர்­தலின் பின்னர் கடந்த சுமார் ஐந்து வரு­டங்­களும் வீணாகிப் போனதை யாவரும் அறிவோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 2005 மற்றும் 2010 ஜனா­தி­பதித் தேர்­தல்­களை நானே தலைமை தாங்கி நடத்­தினேன். இவ்­வி­ரண்டு தேர்­தல்­க­ளிலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், சரத் பொன்­சே­காவும் மாவட்ட அடிப்­ப­டையில் விகி­தா­சார ரீதி­யாக நோக்­கு­கையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லேதான் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றனர்.

2015ஆம் ஆண்­டுத் தேர்­தலில் நான் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த போதும் எந்தக் கட்­சிக்கோ வேட்­பா­ள­ருக்கோ ஆத­ர­வாக கள வேலை­களில் ஈடு­ப­டவோ எனது வாக்­கைத்­தானும் வழங்­கவோ இல்லை. சிறு­பான்மை மக்கள் ஒரு­சேர ஒரே வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக அணி திரண்­டி­ருந்த போதும் கிடைத்­தி­ருந்த அனு­பவம் கார­ண­மாக எனக்குள் அந்தத் தேர்தல் பற்றி அவ­நம்­பிக்கை துளிர்த்­தி­ருந்­த­மையே மேற்­சொன்ன எனது முடி­வுக்குக் கார­ண­மா­யி­ருந்­தது.

2019 ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்­னரும் தாம் வாக்­க­ளித்த வேட்­பாளர் வெற்றி பெற்­றாலும் சிறு­பான்­மை­யினர் எவ்­வித நன்­மை­க­ளையும் அடையப் போவ­தில்லை. தோற்­று­விட்டால் நிலைமை இன்னும் மோச­மா­கி­ விடும் என்ற எனது நம்­பிக்­கைதான் தமிழ்­பேசும் பொது வேட்­பாளர் என்ற கருத்தை வெளி­யிடக் கார­ண­மாக அமைந்­தது.

ஒவ்­வொரு ஜனா­தி­பதித் தேர்­தலின் போதும் உணர்ச்சி வசப்­பட்டு முடிவு எடுப்­பதில் இருந்தும்,தாம் ஏமா­று­வ­தற்கு புதிய வேட்­பா­ளர்­களைத் தேடு­கிற போக்கில் இருந்தும் எமது சமூ­கங்கள் விடு­பட்டு அறி­வு­பூர்­வ­மாக முடி­வு­களை எடுக்­கவும், சிந்­த­னா­பூர்­வ­மான தலை­மைத்­து­வங்­களை வருங்­கா­லத்தில் உரு­வாக்­கவும் முன்­வ­ர­ வேண்டும் என்று வேண்­டுகோள் விடுக்­கிறேன்.

தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு பொது­வான பல பிரச்­சி­னை­களும் வெவ்­வே­றான சில பிரச்­சி­னை­களும், அபி­லா­ஷை­களும் உள்­ளன. தமிழ்த் தேசிய அர­சி­ய­லுக்கும் முஸ்லிம் தேசிய அர­சி­ய­லுக்கும் சிங்­கள பெருந்­தே­சிய அர­சாங்­கங்­க­ளுடன் உடன்­ப­ட வும் முரண்­ப­டவும் நிறைய விட­யங்கள் உள்­ளன. இவ்­வி­ட­யங்­களில் சிறு­பான்­மை­யி­ன­ராக இணைந்து உறுதி பெற்று பெரும்பான்மையோடும் வெளிநாட்டுச் சக்திகளோடும் பேசுவ தற்கும், தமிழ், முஸ்லிம் சிறுபான் மைத் தேசியங்களுக்கிடையிலுள்ள பிரச்சி னைகளைத் தமக்குள் பேசி முடிவு காண் பதற்கும் தமிழ் பேசும் வேட்பாளர் என்ற எண்ணக்கரு ஒரு புதிய பாதையைத் திறக்கும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருக்கிறேன். தமிழ், முஸ்லிம் அரசியல் உடன்பாடு எட்டப்படாமல் சிறுபான்மையினருக்கு விடிவு இல்லை என்ற எண்ணத்தினால் எனது அரசியல் வாழ்வு நெடுகிலும் இவ்வுறவுக்காக பேசியும் எழுதியும் வந்துள்ளேன் என்பதை மக்கள் அறிவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.