ஒசாத பெர்ணான்டோ மற்றும் தசூன் சானக்கவின் சிறந்த இணைப்பாட்டம் காரணமாக இலங்கை அணி 147ஓட்டங்களை குவித்துள்ளது.

பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ளது.

இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் மூன்றாவது போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு லாகூர் கடாபி மைதானத்தில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி முதல் 4 விக்கெட்டுக்களும் 58 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

அதன்படி தனுஷ்க குணதிலக்க 8 ஓட்டத்துடனும், சந்திர சமரவிக்ரம 12 ஓட்டத்துடனும், பானுக்க ராஜபக்ஷ 3 ஓட்டத்துடனும், அஞ்சலோ பெரேரா 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் இதன் பின்னர் அணித் தலைவர் தசூன் சானக்க மற்றும் ஒசத பெர்ணான்டோ 5 ஆவது விக்கெட்டுக்கான ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனால் இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில் 72 ஓட்டத்தையும், 14.3 ஓவரில் 100 ஓட்டத்தையும் பெற்றது. இந் நிலையில் 15.1 ஆவது ஓவரில் ஒசாத பெர்ணான்டோ அரைசதம் பெற்றார். 

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் ஒசாத பெர்ணான்டோ மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 78 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களையும், இமாமட் வஸிம் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.