(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 20 கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறுபான்மையின மக்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கில் டக்ளஸ் தேவானந்தா எமது கூட்டணியில் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்மை சந்தித்திருந்தார். அவரும் எம்முடன் கூட்டணியாக செயற்பட விருப்பம் தெரிவித்தார். இதனை எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.