இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று இரவு 7.00 மணிக்கு பாகிஸ்தானின் லாகூரில் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ளது.

குறிப்பாக இத் தொடருக்கான இலங்கை இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் இளம் தலைவர் தசூன் சானக்க, தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாகவும் அதேபோல் நுவான் பிரதீப், இசுறு உதான மற்றும் வசிந்து ஹசரங்க போன்ற வீரர்களின் அசத்தல் பந்து வீச்சும் இத் தொடரை கைப்பற்றுவதற்கு வலுச் சேர்த்துள்ளது.

இலங்கை அணியில் முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் பாகிஸ்தானை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்டு இருபதுக்கு - 20 தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையிலேயே இன்றைய தினம் மூன்றாவது போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.