ஜப்பான் ஓவியர் வரைந்த பெண் குழந்தையின் கார்ட்டூன் ஓவியம் ஹொங்கொங் ஏலத்தில் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

சீனாவின் ஹொங்கொங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியக்கலைஞர் யோஷிடோமா நரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது.

நைப் பிகைன்ட் பெக் (Knife Behind Back) என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல தோன்றும். ''அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்?'' என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது. 

ஏலம் தொடங்கி, 10 நிமிடத்திற்குள் அந்த ஓவியம் 25 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போனது. இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.451 கோடி ஆகும். 6 பேர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர்.

இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமான விலையில் சிறுமியின் ஓவியம் ஏலம் போனதாக ஏல ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பரில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.