(செ.தேன்மொழி)

பாணந்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது பாணந்துறை - மாவில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து ஒரு இலட்சத்தி 68 ஆயிரத்து 750 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானமும் , 380 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது காரில் வந்துக் கொண்டிருந்த சந்தேக நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். 

இதன்போதே மிக சூட்சுமமான முறையில் காரில் மறைத்து வைத்து இவ்வாறு ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சந்தேக நபரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணைகளை அடுத்து பொல்கொட ஆற்றங்கரையிலிருந்து சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 6 இலட்சத்து 55 ஆயிரம் மில்லி லீட்டர் கோடாக்களையும் (பீப்பாய்கள்) , இரு செப்பு தகரங்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.