அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் விளாசியுள்ளார்.

சாமரி அத்தபத்து அவுஸ்திரேலியாவுடனான இந்த சுற்றுப் பயணித்தில் பெற்றுக் கொண்ட இரண்டாவது சதம் இது என்பதுடன், மொத்தமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஐந்து சதங்களை இதுவரை பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு - 20, 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் இழந்த நிலையில் ஒருநாள் தொடைரயும் இன்றைய தினம் 3:0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியானது அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன்னில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்தது 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் சாமரி அத்தபத்து மாத்திரம் 124 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை குவித்தார். அணியின் ஏனைய வீராங்கனைகள் சொப்ப ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அலிசா ஹெலி 76 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 112 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.